இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் உற்பத்தி பொருட்களின் விலை அதிகமான காரணத்தால் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து ராயல் என்ஃபீல்டு தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே பல கார் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களின் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும் காரணத்தால் கார்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது இன்றைய இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம்
ராயல் என்ஃபீல்டு தனது வாகன உற்பத்தியில் பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி விலை அதிகரித்துள்ளது. இதனால் வருகிற ஏப்ரல் மாதம் அதாவது 2022ஆம் நிதியாண்டின் துவக்கம் முதல் பைக்குகளின் விலையை உயர்த்த திட்டமிட உள்ளதாக இந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எய்ச்சர் மோட்டார்ஸ்
ஏய்ச்சர் மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 6 மாதத்தில் பல முறை தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பது புதிதாக ராயல் என்ஃபீல்டு பைக்-ஐ வாங்க விரும்புபவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை
இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினோத் கே தசாரி கூறுகையில், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் பாதித்துள்ளது.
ஏப்ரல் மாதம் விலை உயர்வு
இந்த விலை உயர்வைப் பல வழிகளில் கட்டுப்படுத்த திட்டமிட்ட போதிலும் விலை உயர்வைத் தடுக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் ஆட்டோமொபைல் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களைப் போல விலை உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியாக 9 சதவீதம்
மேலும் பைக்குகளின் விலை உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் எனக் கேட்கப்பட்டத்திற்கு, ஒற்றை இலக்க அளவில் தான் விலை உயர்வு இருக்கும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிகப்படியாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் 9 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதியில் நம்பர் 1
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தவும், மிட் சைஸ் மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி பிரிவில் தொடர்ந்து நம்பர் 1 இடத்திலேயே இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும், வர்த்தக மாற்றங்களையும் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகன திட்டம்
மேலும் உலகின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் எவ்விதமான திட்டங்களையும் தற்போது தீட்டவில்லை எனச் சித்தார்த் லால் தெரிவித்துள்ளார். டிசம்பர் காலாண்டில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் 1.99 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications