விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலத்தின் தலைநகரான விசாகப்பட்டினத்தில் அமையவிருக்கும் அதானி டேட்டா சென்டருக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் மே 3-ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 130 ஏக்கரில் அதானி குழுமம் சுமார் 14,000 கோடி முதலீடு செய்து டேட்டா செண்டர், ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கவுள்ளது. அதோடு, வணிக பூங்கா, பொழுதுபோக்கு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் ஆகியவையும் இப்பகுதியில் அமைகின்றன. இதன் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, டேட்டா செண்டர் மூன்று ஆண்டுகளுக்குள் அதன் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
விசாகப்பட்டினம் பகுதியில் ஐடி நிறுவனங்கள் வெகுவாக இல்லாத நிலையில், ஆந்திரப் பிரதேசம் நீண்ட காலமாக ஐ.டி உற்பத்தியில் தொடர்பான மோசமான எண்ணிக்கையையே பதிவு செய்து வருகிறது. 2021-2022 ஆண்டு கணக்கின்படி மொத்த ஐடி ஏற்றுமதியில் வெறும் 0.14 சதவீதம் மட்டுமே ஆந்திர மாநிலம் பங்கு வகிக்கிறது.
விசாகப்பட்டினத்தில் போதுமான கட்டமைப்பு இடம் அல்லது ஐடி பூங்காக்கள் இல்லாததன் காரணமாக வேலை தேடுபவர்கள் மற்ற நகரங்களுக்கு இடம்பெயர்வது போன்ற பல சிக்கல்கள் விசாகப்பட்டினத்தில் தொழில்துறையை பாதிக்கின்றன என தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த டேட்டா செண்டர், ஐடி பார்க் திட்டம் அதைப் போக்கும் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் அம்மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத், டேட்டா செண்டர் திட்டம் விசாகப்பட்டினத்தை பொருளாதார மையமாக மாற்றும் என்றார். "ஆந்திராவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகம் முழுவதும் தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த டேட்டா செண்டர் மூலம் நேரடியாக 24,990 பேருக்கும், மறைமுகமாக 10,610 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், "போகாபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதானி டேட்டா பார்க் ஆகிய இரண்டு பணிகளையும் உடனடியாகத் தொடங்க ஆந்திரா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திராவுக்கு முதலீடுகள் மற்றும் தொழில்களை ஈர்ப்பதன் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு விரும்புகிறது," எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் அமர்நாத்.


Click it and Unblock the Notifications