இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் விகிதம் குறைவாக இருக்கும் காரணத்தால், படித்த இளைஞர் முதல் படிக்காதவர்கள் வரையில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவது நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ளது.
பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்தமாக இருப்பதால், வேலை தேடுபவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் போர் பதற்றம் நிறைந்த இஸ்ரேல் நாட்டில் வேலைக்குச் செல்ல கூட்டம் கூட்டமாகச் சென்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு பதிவு, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னர் ட்விட்டர் என்ற அறியப்பட்ட X சமூக வலைத்தளத்தில், சாலையோரத்தில் உள்ள மோமோ கடை உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்குவதாக ஒரு விளம்பரத்தின் புகைப்படம் தான் இப்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
அம்ரிதா சிங் என்ற X பயனர் பகிர்ந்துள்ள இந்த பதிவு, வேலைவாய்ப்பு தேடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில் அறிவிப்பில் வழங்கப்படும் சம்பளம் பலரையும் கவர்ந்திருப்பதால், இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு, பலரின் கருத்துக்களையும் பெற்றுள்ளது. இந்த பதிவில் அம்ரிதா சிங் "இந்தியாவில் இப்போது சராசரி கல்லூரி வழங்குவதை விட இந்த உள்ளூர் மோமோ கடை சிறந்த சம்பளத்தை வழங்குகிறது" என்று இருந்தது. வைரலாக பரவி வரும் இந்த விளம்பரம் இந்தி மொழியில் இருந்தது.
ஒரு பயனர், "எல்லா நாளும் இலவசமாக மோமோஸ் சாப்பிட கிடைக்கும்" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், " TCS ஐ விட இவர்கள் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். "வாக்-இன் இன்டர்வியூ (walk-in interview) இருக்கா?" என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். பலர் கமெண்ட் செய்து கடை முகவரி மற்றும் தொடர்பு எண்ணைத் தெரிவிக்குமாறு கேட்டு வருகின்றனர்.
இதுபோன்ற விளம்பரங்கள் தமிழ்நாட்டில் பல வருடங்களாக வருகிறது, புரோட்டா மாஸ்டர், ப்ரைடு ரைஸ் சமைப்பவர், போன்ற பல வேலைகளுக்கு 30000 முதல் 40000 ரூபாய் வரையில் சம்பளம் அளிக்கப்படும் பதிவுகள் ஏராளமாக உலா வந்துள்ளது.
இந்த பதிவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது இந்தியாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பு சூழ்நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் கூட வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், கல்வித் தகுதி பார்க்காமல் நல்ல சம்பளம் வழங்கும் வேலைகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
இதுபோன்ற சம்பளம் வழங்கும் வேலைகள் எளிதாகக் கிடைக்காததால், படித்த இளைஞர்கள் கூட கைவினைத் தொழில்கள் கற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications