குருகிராம்: இந்தியாவில் தனியார் பள்ளிகள் பல்வேறு காரணங்களை கூறி கல்வி கட்டணங்களை ஆண்டுதோறும் 10% என்ற அளவில் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படி குருகிராமை சேர்ந்த ஒரு தந்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமை சேர்ந்த ரியல் எஸ்டேட் கன்சல்ட்டன்ட் உதித் பந்தாரி, மூன்றாவது படிக்கும் தன்னுடைய மகனுக்கு ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் பள்ளி கட்டணம் செலுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். குருகிராமில் உள்ள புகழ்பெற்ற சிபிஎஸ்இ பள்ளியில் தன் மகனை 3ஆம் வகுப்பு சேர்த்திருப்பதாகவும் அவர்கள் ஆண்டுதோறும் பள்ளி கட்டணத்தை 10% என்ற அளவில் உயர்த்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பள்ளி கட்டணம் உயர்வு குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோர்களுக்கு எந்த விளக்கமும் தரப்படுவதில்லை என்றும் பணம் செலுத்துவதற்கான செயலியில் அடிக்கடி கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான அப்டேட்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பெற்றோர் சென்று இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுவதாக அவர் வருத்தத்துடன் பதிவுத்துள்ளார்.
உதித் பந்தாரி தன்னுடைய மகன் மூன்றாவது வகுப்பு படிக்கிறான்,இதற்கு ஒரு மாதத்திற்கு உணவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து 30,000 ரூபாய் பள்ளி கட்டணமாக செலுத்துகிறேன், இது தவிர பேருந்து கட்டணம் தனியாக செலுத்துகிறேன். இப்படி ஆண்டுதோறும் 10% என்ற அளவில் பள்ளி கட்டணமானது அதிகரித்துக் கொண்டே போனால் என்னுடைய மகன் 12-வது படிக்கும்போது வருடத்திற்கு 9,00,000 ரூபாய் நான் பள்ளி கட்டணமாக மட்டும் செலுத்த வேண்டியது இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.

உதித்பந்தாரியின் இந்த பதிவு பல பெற்றோரது கவனத்தை ஈர்த்துள்ளது . குறிப்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் எந்தவித விளக்கமும் தராமல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இதுபோல அடிக்கடி பள்ளி கட்டணங்களை உயர்த்துவதாக பயனாளர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான சீருடைகளை மாற்றுவது, நோட்டு, புத்தகங்கள், பேனா உள்ளிட்டவற்றை பள்ளியிலேயே வாங்க வேண்டும் என வற்புறுத்துவது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் பல்வேறு அராஜகங்களை செய்வதாக ஒரு பயனாளர் தன்னுடைய பதிவில் வெளியிட்டுள்ளார்.
குப்தா என்பவர் தன்னுடைய குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு 22 ஆயிரம் ரூபாய் பள்ளி கட்டணமாக செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மற்றொரு பயனரோ என்னுடைய நண்பரின் மகள் பெங்களூருவில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பயின்று வருகிறார். இரண்டாம் வகுப்பு பயிலும் அவருக்கு ஒரு ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர் என்றும் ஆண்டுதோறும் 20% வரை கட்டணங்களை உயர்த்துவதாகவும் கூறியுள்ளார். பள்ளி கட்டணங்களை சீர்ப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications