இன்றைய சூழலில் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும். ஒரு சில கிளிக்குகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் உணவை ஆர்டர் செய்து வீட்டிற்கு வர வைக்கலாம். இது பேச்சிலர்கள், மாணவர்கள், வீட்டில் சமையல் செய்ய முடியாத நபர்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. அதே நேரத்தில் உணவக உரிமையாளர்கள் ஆன்லைன் டெலிவரி தளங்கள் பின்பற்றும் கட்டண முறைகள் மற்றும் கூடுதல் கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மெட்ரோ நகரங்களில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களின் பயன்பாடு சற்று அதிகம். ஆனால் இந்த தளங்கள் வசூலிக்கும் கமிஷன் நியாயமற்ற முறையில் இருப்பதாக சில ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.

உணவகங்களின் வளர்ச்சிக்கு இந்த தளங்கள் உதவி இருந்தாலும், தங்களுடைய லாபத்தை அதிகரிப்பதற்காக வாடிக்கையாளர்களிடம் அதிக சார்ஜ் வசூலிப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி, By2 Coffee என்ற உணவகத்தின் நிறுவனரான ராகவேந்திரா படுகோன் உணவகத்தில் நேரில் வந்து உணவு வாங்குவதற்கும் ஆன்லைன் தளங்களின் மூலம் உணவு வாங்குவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.
நேரில் வந்து வாங்கும் போது ஒரு பிளேட் இட்லி ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அதே இட்லிக்கு வாடிக்கையாளர்கள் ரூ.80 முதல் 90 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
உணவகங்களில் விற்பனை செய்யும் விலையும், ஆன்லைன் டெலிவரி தளங்களில் விற்பனை செய்யப்படும் விலையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். டெலிவரி சார்ஜ் மட்டுமே கூடுதலாக இருக்க வேண்டும். ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் யாரும் ஆன்லைன் டெலிவரி தளங்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. இருந்தாலும் இப்போது அவை வசூலிக்கும் சார்ஜ் அதிகமாக இருக்கிறது.
ஒரு உணவகத்திற்கு ஆர்டர் கிடைத்தால் அந்த உணவகம் ஆர்டர் கமிஷன், வாடிக்கையாளர்களிடம் பிளாட்பார்ம் கட்டணம், கேட்வே கட்டணம், சேவை கட்டணத்திற்கான ஜிஎஸ்டி, ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டால் அதற்கான கட்டணம், விளம்பர செலவுகள் இப்படி பலவற்றுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது உணவக உரிமையாளர்களுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து கூறிய கர்நாடக மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே செட்டி ஆன்லைன் டெலிவரி தளங்கள் உணவகங்களின் அனுமதியில்லாமல் அதிக பணத்தை பிடித்தம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
சமீப காலமாக ஆன்லைன் டெலிவரி தளங்கள் தங்களுக்கு சாதகமான விளம்பரங்களை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தெரியாமல் அறிவிப்பதாகவும், அதற்கான செலவை அந்தந்த உணவகங்களிடமிருந்தே வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
பெங்களூரு ஹோட்டல்கள் சங்கத்தின் கௌரவத் தலைவரான பி.சி. ராவ் கூறுகையில், ஆன்லைன் டெலிவரி தளங்களிடம் 20 சதவீத கமிஷனுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் அந்த தொகையை மட்டுமே கழிக்க வேண்டும். அதை தாண்டி எந்த தொகையையும் வாங்கக்கூடாது.
இப்படி செய்தால் ஆன்லைன் டெலிவரி தளங்களுக்கு கமிஷன் போக மீதம் 70%-வது கைக்கு கிடைக்கும். ஆனால் தற்போது 30 முதல் 40 சதவீத வருமானம் மட்டுமே ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. கமிஷன் தொகைக்கு கூடுதலாக சில மறைமுக கட்டணங்களையும் ஆன்லைன் டெலிவரி தளங்கள் வசூலிக்கின்றன என்று கூறியுள்ளார்.
எனவே இது போன்ற சிக்கல்கள் எதுவும் நடக்காமல் இருக்க சேவை கட்டணம் 20 சதவீதத்தை தாண்டாமல் இருக்க வேண்டும். உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளும் கமிஷன் தொகையை மட்டும் தான் ஆன்லைன் டெலிவரி தளங்கள் வசூலிக்க வேண்டும். உணவகங்களிடம் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்யக்கூடாது. ஒருவேளை கூடுதல் கட்டணத்தை ஆன்லைனில் டெலிவரி தளங்கள் வசூலித்தாலும் அதற்கான அறிக்கையை ஹோட்டல்களுக்கு வழங்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
