இந்தியாவில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பதாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெற்றோர்கள் குற்றம் சாட்டிய வண்ணம் இருக்கின்றனர். ஒன்றாம் வகுப்பிற்கே பல லட்சம் ரூபாய்க்கு மேல் பள்ளிகளில் கல்வி கட்டணமாக கேட்கின்றனர் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் லேபர் லா அட்வைசர் எனப்படும் எல்எல்ஏ நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிஷப் ஜெயின் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ரிஷப் ஜெயின் வெளியிட்ட பதிவில் தன்னுடைய மகளுக்கு முதல் வகுப்பு அட்மிஷனுக்காக பள்ளியில் 4.27 லட்சம் ரூபாயை கல்வி கட்டணமாக கேட்கின்றனர் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவில் சிறந்த கல்வி என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது என அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் தன்னுடைய மகளுக்காக பள்ளி நிர்வாகம் அளித்திருந்த அந்த கட்டண விவரங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் பதிவு கட்டணமாக 2000 ரூபாய் அட்மிஷன் கட்டணமாக 40,000 ரூபாய் ஆண்டு பள்ளி கட்டணமாக 2.52 லட்சம் ரூபாய், பேருந்து கட்டணமாக 1.8 லட்சம் ரூபாய், புத்தகங்கள் மற்றும் யூனிஃபார்ம்க்கு 70,000 ரூபாய் மற்றும் முன்னெச்சரிக்கை தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 4.27 லட்சம் ரூபாயை ஒரு ஆண்டுக்கு கட்டணமாக கேட்கின்றனர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் தரமான கல்விக்கான விலை இதுதான் என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரால் கூட தன்னுடைய பிள்ளையின் கல்விக்காக அதுவும், முதல் வகுப்புக்காக இவ்வளவு தொகை செலவிட முடியாது என கூறியுள்ளார். ஏனெனில் இந்த 20 லட்சம் ரூபாய் வருமானத்தில் பெரும்பாலான தொகையை நாம் வருமான வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல் மீதான வாட் வரி, சாலை வரி, சுங்கச்சாவடிக்கான கட்டணம் மற்றும் ப்ரொபஷனல் டேக்ஸ், மூலதன ஆதாயவரி ,மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் , டெர்ம் இன்சூரன்ஸ் என பலவற்றுக்கு செலவு செய்து விடுகிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவில் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது குறித்து பெற்றோர் தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இருந்தாலும் தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இதனிடையே டெல்லி அரசாங்கம் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்திருக்கிறது.
ஏனெனில் டெல்லியில் செயல்படும் பல்வேறு தனியார் பள்ளிகளும் லட்சக்கணக்கில் கல்வி கட்டணம் கேட்பதாக பெற்றோர் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது இதையடுத்து தான் டெல்லி அரசாங்கம் இப்படி ஒரு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications