நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சுமார் 111 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானங்களை National Infrastructure Pipeline (NIP) திட்டத்தின் மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன் படி என்ஐபி திட்டத்தின் கீழ் சுமார் 44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஒப்புதலைப் பெற்றுத் தற்போது செயல்படுத்தத் துவங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.

என்ஐபி திட்டத்தின் மூலம் இந்தியாவின் கட்டுமான துறையில் சுமார் 111 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் 2024-25ஆம் ஆண்டுக்குள் குவியும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.
இந்த 111 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் சுமார் 40 சதவீதம் அதாவது 44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 22 லட்சம் கோடி ரூபாய் மதப்பிலான திட்டங்கள் திட்டமிடப்பட்டு (under development) வரும் நிலையில் உள்ளது.
மேலும் என்ஐபி திட்டத்தில் 39 சதவீத முதலீடுகளை மத்திய அரசும், 40 சதவீத முதலீட்டை மாநில அரசும், மீதமுள்ள 21 சதவீத முதலீட்டைத் தனியார்த் துறை முதலீட்டு மூலம் செயல்படுத்த இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஐபி திட்டத்தின் கீழ் எனர்ஜி துறை சார்ந்து சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி, உணவு பதப்படுத்தல் துறையைச் சார்ந்து 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்து 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், மொபிலிட்டி மற்றும் ரயில்வே துறையைச் சார்ந்து 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், டிஜிட்டல் இன்பரா துறையைச் சார்ந்து 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் எனத் துறை வாரியாகப் பல்வேறு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
என்ஐபி திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பெரிய அளவிலான லாபத்தைக் கொடுக்கும் என நித்தின் கட்கரி பெரிய அளவில் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் நிறைவடையும் நேரத்தில் தற்போது நாட்டில் உள்ள டோல் பிளாசா மூலம் கிடைக்கும் 34,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
கட்டுமான துறையில் பல பெரிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தத் துவங்கியுள்ள நிலையில், இந்தியக் கட்டுமான துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 100 சதவீத அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications