பெங்களூரில் சில விசித்திரமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும். அதே போல தான் ஒருவரின் பழைய வீடியோ தற்போது X தளத்தில் மீண்டும் பரவி வருகிறது. தான் எவ்வளவு தான் அதிக சம்பளம் பெற்றாலும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த நபர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய ஆண்டு வருமானம் 45 லட்ச ரூபாய். அவருக்கு அப்படி என்னதான் கஷ்டம் இருக்கிறது? என்ற விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் அட்வைஸராக இருக்கும் அன்ஷுமன் சர்மாவுடன் சூர்யா என்ற ஐடி ஊழியர் தனது மாத செலவுகள் மற்றும் முதலீடு குறித்து பேசியிருப்பார். இவருடைய வீடியோ முதன்முதலாக யூடியூபில் பகிரப்பட்டது. ஆனால் அந்த வீடியோவின் ஒரு பகுதி X தளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மாதத்திற்கு ரூ.50,000 சம்பளம் கிடைத்தாலே போதும்.. தாங்கள் இருக்கும் வேலையில் இருந்து நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலையே தற்போது இருந்து வருகிறது. அப்படி இருக்கும் சூழலிலும் வருடத்திற்கு ரூ. 45 லட்சம் அப்படியானால் மாதத்திற்கு ரூ.2.45 லட்சம் சம்பளம் பெறும் ஒருவர் தன்னுடைய செலவுக்கு பணம் இல்லை என்று புலம்பியுள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் சூர்யா என்ற நபர் கடந்து 14 ஆண்டுகளாக அங்கு தான் இருக்கிறார். இவருக்கு வருடாந்திர சிடிசி ரூ.45 லட்சம். இதில் வரியெல்லாம் கழித்துக் கொண்ட பின் கைக்கு மாதம் ரூ.2.45 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இவ்வளவு அதிகமான சம்பளம் பெற்றாலும் மாத கடைசியில் தன்னிடம் பணமே இருக்காது என்று சூர்யா ஓப்பனாகக் கூறியுள்ளார்.

அதே இன்டர்வியூவில் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு தன்னிடம் செலவுகளை சமாளிக்க பணம் இல்லாததாகவும்,செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியவில்லை என்றும் பகிர்ந்திருக்கிறார். அதோடு சூர்யா தனது மாதாந்திர செலவுகளையும் கூறி இருந்தார். தான் வாங்கிய வீட்டுக்காக அவர் மாதம் ரூ.63,000 ஹோம் லோன் செலுத்தி வருகிறார்.
தனது குழந்தையின் படிப்புக்காக மாதா மாதம் ரூ. 11,000 செலுத்தி வருகிறார். உணவு பொருட்கள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்குவதற்கு ரூ. 12,000 செலவாகிறதாம். இதில் இதர சில்லறை செலவுகள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000-த்தை தொடுகிறது. மேலும் ஷாப்பிங் வெளியூர் பயணம் செல்வது வெளியில் சாப்பிடுவதற்காக மாதத்திற்கு ரூ. 32,000 செலவு செய்கிறார்.
ஒருவருடைய சம்பளத்தில் 30 சதவீதத்திற்கும் குறைவான தொகையை இஎம்ஐ செலுத்தலாம். இது நல்ல நிதி நடத்தை என்று நிதி நிபுணர்கள் கருதுகின்றனர். அதன்படி பார்க்கும்போது சூர்யா தனது வீட்டுக் கடனுக்காக செலுத்தும் இஎம்ஐ ஆரோக்கியமான முதலீடு தான். இதில் அவர் ஷாப்பிங் மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக மாதம் செலவு செய்யும் ரூ.32,000 தொகை தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பலரும் இந்த ஒரு விஷயத்தை லைப் ஸ்டைல் இன்ஃப்லேஷன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது சம்பளம் அதிகரிக்கும் போது தொடர்ந்து ஆடம்பரச் செலவுகளையும் அதிகரிப்பது இதன் பொருளாகும். இந்த வீடியோ குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தனர். ஒரு பயனர் மாதம் செய்யக்கூடிய அத்தியாவசிய செலவுகளை தனியாக பிரித்து வைக்க வேண்டும். அதன் பிறகு செய்யப்படும் ஆடம்பர செலவுகளை சேமிப்புக்கு பின்னர் தான் தொட வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு நபரோ இதில் ஏதும் குறைபாடு இருப்பதாக தெரியவில்லை என்று சூர்யாவுக்கு ஆதரவாக கூறியிருந்தார்.
மாதம் ரூ.2.45 லட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கே இந்த நிலைமை அப்படியானால் ரூ.10,000 முதல் ரூ.20,000 மாத சம்பளம் பெறும் நபர்களை யோசித்துப் பாருங்கள். தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் குறைந்த சம்பளம் பெறுபவர்களை மட்டுமல்ல ..அதிக சம்பளம் பெறுபவர்களையும் பாடாய்படுத்துகிறது என்பதற்கு சூரியாவின் கதை ஒரு சிறந்த உதாரணம்!


Click it and Unblock the Notifications
