நம்மூர் மக்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் சரி.. சோகமாக இருந்தாலும் சரி பிரியாணி தான் எமோஷன். ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால் ஒரு வாய் சீரக சம்பா பிரியாணியை சாப்பிட்டு மனதை லேசாக்கி கொள்ளும் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். பிற உணவுகளைக் காட்டிலும் பிரியாணிக்கு ஃபேன் பேஸ் சற்று அதிகம் தான். இதை தெரிந்து கொண்ட 2 சகோதரிகள் தங்கள் பாட்டியின் பிரியாணி ரெசிபியை கேட்டு இன்று கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய RNR தொன்னெ பிரியாணி என்ற உணவகத்தில் வியாபாரம் சக்கை போடு போடுகிறது.
ரம்யா பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தவர். இவருடைய சகோதரி ஸ்வேதா சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுகலை பட்டத்திற்காக இங்கிலாந்து சென்றார்.
பெங்களூர் திரும்பிய பிறகு ரம்யாவும் ஸ்வேதாவும் இணைந்து சுமார் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ஒரு கிளவுட் கிட்சன் தொடங்கினர். சிறு வயதிலிருந்தே தங்கள் பாட்டியின் கைமணத்தில் சாப்பிட்டு வளர்ந்த இருவரும் அந்த சுவையை பிறருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் குறிப்பு கேட்டு சமைக்கத் தொடங்கினர்.

ரம்யாவும் மற்றும் ஸ்வேதாவும் இணைந்து தொடங்கிய கிளவுட் கிட்சன் ஒரே மாதத்தில் 10,000-த்திற்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்று தந்தது. இதனால் 2020 ஆம் ஆண்டில் ஒரு உணவகம் திறக்கலாம் என்று முடிவு செய்தனர். தங்கள் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் தாத்தா இராமசாமி ஆகியோரின் பெயர்களில் இருந்த முதல் எழுத்தை இணைத்து RNR தொன்னெ பிரியாணி என்று தங்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டினர்.
பெங்களூரில் 14 கிளவுட் கிச்சனுடன் இந்த ஹோட்டலையும் நடத்தி வருகின்றனர். வழக்கமாக பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்படும் பிரியாணிக்கு மாற்றாக வாழை இலையில் வைத்து பேக் செய்து அதை ஒரு டின்னில் அடைத்து டெலிவரி செய்தனர். இதுவே இவர்களின் தனித்துவமான ஸ்டைலாக மாறியது.
இன்றளவும் தங்கள் ஹோட்டலில் பிரியாணி செய்ய சீரக சம்பா அரிசியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பிற பிரியாணி நிறங்களுக்கு மாற்றாக இவர்கள் செய்யும் பிரியாணியில் கொத்தமல்லி மற்றும் புதினா சற்று கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இதனால் பிரியாணி லேசான பச்சை நிறத்தில் இருக்கிறது.
RNR தொன்னெ பிரியாணி கடையில் விற்பனை செய்யப்படும் பிரியாணிக்கு பெங்களூரில் தனி பேன் பேஸே இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பிரியாணியுடன் ரைத்தா, சாலட் மற்றும் ஒரு சுவீட்டையும் சேர்த்து வழங்கி வருகின்றனர். சைவ பிரியாணி ரூ.190-க்கும், அசைவ பிரியாணி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரியாணி மட்டுமல்ல ட்ரம் ஸ்டிக் சில்லி, நாட்டுக்கோழி குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் இளநீர் பாயாசம் மற்றும் கோலி சோடா என மக்கள் விரும்பும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இவர்களுடைய பிசினஸ் இன்று ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டித் தருகிறது. தங்கள் பாட்டியின் பாரம்பரிய சுவையை மட்டுமே கொண்டு முறையான திட்டமிடலுடன் களமிறங்கி இன்று பலருக்கும் முன்னுதாரணமாய் திகழ்கின்றனர்.


Click it and Unblock the Notifications
