இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் போன்ற காரணத்தினால் பெரும்பாலான மக்கள் தங்கள் ஷாப்பிங்கை ஆன்லைனிலேயே முடித்து விடுகின்றனர். தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை களைகட்டி இருக்கிறது. அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலேயே விற்பனை கணிசமான உயர்வை கண்டுள்ளது. தீபாவளி பண்டிகை வர இருப்பதன் காரணமாக.. இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை. குறைந்த பணப்புழக்கம் ஆகியவை இருந்தும் ஒரே வாரத்தில் பண்டிகை கால சிறப்பு விற்பனையாக எதிர்பார்த்ததை விட அதிக அளவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை செய்துள்ளது.

டேட்டம் இன்டெலிஜென்ஸின் அறிக்கையின்படி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 54,500 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும். இந்த விற்பனையில் 38 சதவீதம் மொபைல் போன்களாகும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 21 சதவீதமாகும்.
ஐபோன் 15 மாடல் மற்றும் அதற்கு முன்னர் வெளியான ஐபோன்கள், சாம்சங் கேலக்ஸி எஸ் 23 FE போன்ற மொபைல்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன. உயர்தர மொபைல் போன்கள், குறிப்பாக ரூ. 30,000-க்கு மேல் உள்ளவை, குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் காரணமாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய ஐபோன் மாடல்களின் வெளியீடும் பழைய பதிப்புகளின் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்தது.
டபுள் டோர் பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவிகள் போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. சிறுநகரங்களில் வசிப்பவர்கள் EMI கட்டணங்களைத் தேர்ந்தெடுத்து இந்த பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர். ப்ரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் கிட்டத்தட்ட 70% டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 முதல் 48 மணி நேரத்தில் சாதனை படைத்த புள்ளிவிவரங்களுடன் தொடங்கியது. அமேசானின் கூற்றுப்படி சுமார் 11 கோடி வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை செய்துள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் டயர் 2 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து ஆர்டர் செய்துள்ளனர். பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய பண்டிகை காலத்தில் ஆன்லைன் விற்பனை 23 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 1 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 16 சதவீதம் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக 81,000 கோடி ரூபாய் வசூலானது.
பானசோனிக் ஆன்லைன் விற்பனையில் இரட்டை இலக்க விற்பனையை பதிவு செய்துள்ளது. பிரீமியம் தயாரிப்புகளை நோக்கிய நுகர்வோர் விருப்பத்தை இது தெளிவாக பிரதிபலிக்கிறது. அவற்றோடு 5 ஸ்டார் ஏசிகள், ஸ்மார்ட் வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ் கோட்ரேஜ் அப்ளையன்ஸ் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பிரீமியம் பொருட்களும் அதிக அளவில் விற்பனையானது.


Click it and Unblock the Notifications