1977-ஆம் ஆண்டு மும்பையில் பதிவான ரூ.7.65 திருட்டு வழக்கு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. மசாகான் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி குல்கர்னி ஜனவரி 14 அன்று பிறப்பித்த உத்தரவில் இந்த வழக்கை மூடுவதாக உத்தரவிட்டுள்ளார். வழக்கை மூடுவதற்காக நீதிபதி கொடுத்த விளக்கம் முக்கியமான கவனிக்கப்பட உள்ளது.
1977-ல் பதிவான இந்த திருட்டு வழக்கு (ஐபிசி பிரிவு 379) பல ஆண்டுகளாக முன்னேற்றமின்றி நிலுவையில் இருந்ததுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீஸார் பலமுறை முயன்றும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் நான்-பெயிலபிள் வாரண்டுகள் கொடுக்கப்பட்டும் கூட பலனளிக்கவில்லை. மேலும் புகார் அளித்த நபரும் காலப்போக்கில் இடம் மாறியதாலும், போலீஸாரால் தொடர்புகொள்ள முடியாத காரணத்தாலும இந்த வழக்கு பல வருடங்களாக தேங்கியது.

நீதிமன்றம் இந்த வழக்கு பல ஆண்டுகளாக முன்னேற்றமின்றி இருப்பதை கவனித்தது. இதைத் தொடர்ந்து வைத்திருப்பது சட்ட ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ எந்த பயனும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கிற்கு போதுமான காலம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
மேலும் திருடப்பட்ட ரூ.7.65 தொகை குறித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார்தாரர் கிடைத்தால் அவருக்கு திருப்பி அளிக்க வேண்டும். புகார்தாரர் கிடைக்காவிட்டால் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு அந்த தொகையை அரசு கணக்குக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, திருடப்பட்ட தொகை ரூ.2,000-க்கு குறைவாக இருப்பதால் இந்த வழக்கு சுருக்க விசாரணை (summary trial) மூலம் விரைவாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் வழக்கு 50 ஆண்டு காலம் நிலுவையில் இருந்தது.
இந்த முடிவு நீதித்துறையின் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தீர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் 30 ஆண்டுகள் பழைய பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டினர் சட்ட வழக்கும், 2003-ஆம் ஆண்டு மோசமாக வாகனத்தை ஓட்டிய வழக்கும் முடிக்கப்பட்டன. குற்றவாளி, புகார்தாரர், சாட்சிகள் கிடைக்காத நிலையில் இத்தகைய வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் முன்னுரிமையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications