இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) ஒரு அமைதியான நெருக்கடியை சந்தித்து வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் (பழைய ஐஐடி) படித்த, ஒரு காலத்தில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை சம்பாதித்த ஒரு நடுநிலை மேலாளர், தற்போது வேலையில்லாமல், ஒரு நேர்காணலுக்குக் கூட அழைக்கப்படாமல் தவிப்பதாக சமூக வலைதளமான ரெடிட் தளத்தில், தன்னுடைய சோக கதையை பகிர்ந்துள்ளார்.
புதிய வீடு வாங்கிய சில வாரங்களில் வேலையிழப்பு : நிஃப்டி 50-இல் பட்டியலிடப்பட்டிருந்த ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், சமீபத்தில் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தி ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வீடு வாங்கிய சில வாரங்களிலேயே நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக அவர் தன்னுடைய வேலையை இழந்தார்.

தற்போது, வேலை இல்லாததால், வீட்டுக் கடனை (EMI) சமாளிக்க முடியாமல், அந்த புதிய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். எனது சேமிப்பு மிக வேகமாக தீர்ந்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே என்னால் சமாளிக்க முடியும் என்று அவர் தனது நிதி நெருக்கடி குறித்து பதிவு செய்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக அயராது தேடியும், பிரீமியம் வேலைவாய்ப்பு தளங்களான லிங்க்ட்இன் மற்றும் நௌக்ரி ஆகியவற்றை பயன்படுத்தியும், தனக்கு கிடைத்தது வெறும் இரண்டு நேர்காணல்கள் மட்டுமே தவிர வேலை கிடையாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சம்பளத்தை குறைத்துக்கொண்டு வேலைக்குச் செல்ல தயாராக இருந்தபோதும், தனக்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை. இந்த உயர் மட்டத்தில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எல்லாம் தலைகீழாக சரிந்துவிட்டது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இவரின் இந்த சிக்கல் நிதி ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் குடும்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களும் மிகுந்த மன அழுத்தத்திலும், துக்கத்திலும் இருக்கிறார்கள் என்று பகிர்ந்துள்ளார்.
நடுநிலை ஊழியர்களுக்கு அதிகப் பாதிப்பு : இவரின் பதிவுக்கு பலரும் பதிலளித்திருந்த நிலையில், இவரை போலவே பல நடுநிலை மேலாளர்கள் மற்றும் அனுபவமிக்க வல்லுநர்கள் இன்றைய ஐ.டி. துறையின் நிச்சயமற்ற சந்தையில் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஐ.டி. சூழ்நிலை மிக கொடூரமானது என்றும், இது உடனடியாக சீரடைய வாய்ப்பில்லை என்றும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிதித் துறை ஆய்வாளர்கள் கூறுகையில், "சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் எப்போதும் பல வழிகளில் வருமானம் ஈட்ட வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகள் மேம்பட்டாலும், நீண்ட காலத்தில் அதிக சம்பளம் தரும் தொழில்நுட்ப வேலைகள் குறைந்துவிடும் அபாயம் உள்ளது" என்று எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications