இந்தியாவில் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை எதிர்பார்ப்புகள் தற்போது உச்சம் தொட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் சக நண்பர்களின் தாக்கத்தால், சம்பளதாரர்கள் மத்தியில் ஆடம்பர கார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த மோகம் பல இளைஞர்களைத் தாங்க முடியாத நிதிச் சுமையில் தள்ளிவிடுகிறது.
மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், ரூ.1.2 லட்சம் EMI கட்டுவது என்றால் அதை என்னவென்று அழைப்பது..? இதுதான் தற்போது இந்தியாவில் உயரும் ஒரு புதிய நிதிப் போக்காக இருக்கிறது. அதிக வருமானம் ஈட்டும் சம்பளதாரர்கள் தங்கள் மாத வருமானத்தில் 60% வரை ஆடம்பரக் கார்களுக்கான கடனுக்கு செலவிடுவதாக நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

EMI-இல் 60% வருமானம் : டைம் (Dime) நிதி நிறுவனத்தின் நிறுவனர் சந்திரலேகா எம்.ஆர்., லிங்க்ட்இன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ஒரு கார் ஷோரூம் ஊழியர் பகிர்ந்த தகவலை மேற்கோள் காட்டி அவர் கூறியிருப்பதாவது, "மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், ரூ.70 முதல் ரூ.80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் போன்ற ஆடம்பர கார்களை வாங்க முன் வருகின்றனர்.
இதற்காக அவர்கள் ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை முன்பணம் செலுத்துகின்றனர். மீதமுள்ள தொகை 9% வட்டி விகிதத்தில் 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெறப்படுகிறது. இதன் விளைவாக, அவர்களின் மாத EMI ஆக ரூ.1.2 லட்சம் செலுத்துகிறார்கள்.
இது, வீட்டு வாடகை, மளிகைச் செலவுகள், பெட்ரோல், காப்பீடு அல்லது காரின் பராமரிப்புச் செலவுகளுக்கு முன்பே 60% வருமானத்தை இஎம்ஐ-யில் விழுங்கி விடுகிறது. மேலும், கார் ஷோரூமை விட்டு வெளியேறிய அடுத்த கணமே அதன் மதிப்பில் 15% குறைந்துவிடுகிறது.
வெற்றி என்றால் ஆடம்பர காரா..?:இதுகுறித்து சந்திரலேகா கூறுகையில், "நமது சமூக ஊடகங்கள், உண்மையில் தங்களால் வாங்க முடிந்ததோ இல்லையோ, ஆடம்பர வாகனங்களைக் கொண்டு பந்தயம் கட்டும் நபர்களால் நிரம்பி வழிகிறது. 'வெற்றி' என்றால் ஆடம்பரக் கார் என்று இன்ஸ்டாகிராம் நமக்கு சொல்கிறது. ஆனால், உங்கள் வங்கிக் கணக்கும் அதற்கு உடன்படுகிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடும்பச் சொத்து அல்லது பிற வருமான ஆதாரங்கள் கொண்ட சிலருக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான சம்பளதாரர்களுக்கு இந்த கணக்கு ஒத்துவராது. ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பாதித்தால், ரூ.12 லட்சம் மதிப்புள்ள காரை வாங்குவதுதான் நியாயமானது. ரூ.80 லட்சம் கார் அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.
பெங்களூரு போன்ற நகரங்களில், கார் வைத்திருப்பது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உதவும் ஒரு அறிவார்ந்த முதலீடாக இருக்கலாம். இருப்பினும், இங்கே கேள்வி உரிமையைப் பற்றியது அல்ல, அதன் நோக்கத்தைப் பற்றியதுதான் என்கிறார் சந்திரலேகா.
உங்களுக்குத் தேவை என்பதற்காக வாங்குகிறீர்களா அல்லது நீங்கள் சாதனை செய்துவிட்டீர்கள் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வாங்குகிறீர்களா? என்ற முக்கியக் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். உண்மையான செல்வம் என்பது வாசலில் நிற்கும் கார் அல்ல. அது சுதந்திரம், மன அமைதி மற்றும் நீங்கள் தூங்கும்போது வளரும் சொத்துக்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications