இன்றைய காலத்தில் வீடு என்பது அனைவருக்கும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும், வங்கிகள் வீட்டுக் கடன்களை எளிதாக்கியுள்ளதால், வீடு வாங்கும் கனவு தற்போது பலருக்கும் நிறைவேறி வருகிறது. ஆனால், இன்னும் சிலரால் சொந்த வீடு வாங்க முடியாமல் வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். வாடகை வீடுகளை பொறுத்தவரை, பராமரிப்பு செலவுகள் கிடையாது. அதை வீட்டின் உரிமையாளரே பார்த்துக் கொள்வார். மேலும், வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம் மாற விரும்பினால், உடனே வேறு வாடகை வீட்டிற்கு குடியேறலாம். இதில் பெரிதாக எந்த சிக்கலும் இருக்காது.
அதேபோல், சொந்தமான நிலம் வாங்கி வீடு கட்டினால் கூட அதில் பல வசதிகள் இருக்காது. ஆனால், பல இடங்களில் வாடகை வீடு அல்லது அப்பார்ட்மென்ட் வீட்டில் ஏராளமான வசதிகள் கிடைக்கும். பார்க், நீச்சல் குளம், ஜிம், அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு, பள்ளிகள் என பல வசதிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், வாடகை வீட்டில் இருப்பதில் சில சிக்கல்களையும் பலரும் சந்திக்கின்றனர். வீட்டு உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் அடிக்கடி ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இதுமாதிரியான ஒரு சம்பவம் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தொழில்முனைவோர் ஷ்ரவன் டிக்கூ LinkedInஇல் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்ரவன் டிக்கூ, சர்ஜாபூர் ரோட்டில் உள்ள ஒரு 2BHK வீட்டில் இருந்து 2 ஆண்டுகள் கழித்து வெளியேறிய பின்னர், தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், நான் அந்த வீட்டிற்குள் குடியேறி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தும், வீட்டின் உரிமையாளர் ஒருமுறை கூட என்னிடம் பேசவில்லை. காரணம்.. அவருக்கு கன்னடம் மட்டுமே பேச தெரியும். இதனால், எப்போதும் அந்த கட்டிடத்தின் மேலாளர் மட்டுமே என்னை தொடர்பு கொள்வார்.
ஆரம்பத்தில் டிக்கூவுக்கு உரிமையாளரின் தலையீடு இல்லாததால், அவர் நிம்மதியாக இருந்தார். பின்னர், பழுது வேலைகளும், 13-வது மாடியில் உடைந்த கண்ணாடி ஜன்னல் போன்றவை கூட, அவரது தனி பொறுப்பாக ஆகிவிட்டது. நான் அந்த பழுதுக்கான செலவினத்தை வாடகையில் இருந்து கழித்து, வாட்ஸ் அப்பில் பில் அனுப்பியபோது உரிமையாளர் அதை நிராகரித்து விட்டார். இதனால், மேலாளர் என்னை தொடர்பு கொண்டு, 'பையா.. அப்படி நடக்காது' என்று கூறினார்.
பின்னர் வீட்டை காலி செய்தபோது, வீட்டு உரிமையாளர், படிப்பூச்சு செலவுக்காக ரூ.55,000 மற்றும் ரூ.25 ஆயிரத்திற்கு மிக்சலினியஸ் கட்டணங்கள். மேலும், லிப்ட் பயன்படுத்தியது ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.82,000 கோரினார். மேலும், ரூ.1.5 லட்சம் வைப்பு தொகையில் இருந்து, அவர் பெற்றது வெறும் ரூ.68,000 மட்டுமே. மீதமுள்ள ரூ.82,000-ஐ படிப்பூச்சு உள்ளிட்ட மற்ற சேதங்களுக்கு உரிமையாளர் பிடித்துக் கொண்டுள்ளார்.
சரியான விடாமுயற்சியுடன் செயல்படாததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்களைக் கையாள்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இதுபோன்ற செயல் வருத்தமளிப்பதாகவும் டிக்கூ கூறியுள்ளார். மேலும், பெங்களூருவில் நில உரிமையாளர்கள் அச்சுறுத்தலாக மாறி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். இது பெங்களூரு மட்டுமல்ல. சென்னையில் உள்ள எனது வீட்டு உரிமையாளரால் நான் இதேபோல் ஏமாற்றப்பட்டேன் என்றும் இந்தியாவில் நியாயமான வாடகை விதிமுறைகள் இல்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications