ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தினை வெளியிட்டு அனைவரையும் குழப்பி வருகிறார். திடீரென நேற்று ஈரான் போரை 5 நாட்கள் நிறுத்துவதாகவும், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் கூறினார். ஆனால் ஈரானோ டிரம்ப் கூறுவது முற்றிலும் பொய், அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்க வில்லை என மறுத்தது.
ஈரான் போர் முடிவுக்கு வருமா வராதா, டிரம்ப் கூறுவது உண்மையா, ஈரான் கூறுவது உண்மையா என பல குழப்பம் மக்களுக்கு எழுந்திருக்கிறது. இதற்கிடையே டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னணியில் பல கோடி ரூபாய் பணம் விளையாடி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை காலை 7.05 மணிக்கு ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டு நாட்களாக மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இலக்கை நோக்கி இந்த பேச்சுவார்த்தை இருந்தது என கூறி இருந்தார். இதனை அடுத்து ஈரான் மீதான அனைத்து தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த பதிவு வெளியான உடனேயே கச்சா எண்ணெய் விலை சரிந்தது அமெரிக்க பங்குச்சந்தை உயர தொடங்கியது. ஈரான் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடக்கவில்லை என கூறிய உடன் பங்குச்சந்தை சரிந்து கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது. டிரம்ப் காலை 7.05 மணிக்கு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார், ஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்க பங்குச்சந்தையில் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் மதிப்பு சரியும், பங்குச்சந்தை உயரும் என தெரிந்து 6.50 மணி அளவிலேயே பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
S&P 500 E-mini futures காண்ட்ராக்டில் பெரிய பணம் முதலீடு செய்யப்பட்டு, கச்சா எண்ணெய்க்கான பியூச்சர்ஸ் கான்டிராக்டில் ஃபுட் ஆப்ஷனிலும் பெரிய பணம் பெட் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ப்ரீ மார்க்கெட் எனப்படும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கும் முன்னரே இது நடந்துள்ளது. அப்படி என்றால் டிரம்ப் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்பது முன் கூட்டியே தெரிந்து தான் இப்படி பெரிய தொகை பங்குச்சந்தைக்கு வந்துள்ளது இது இன்ஸைடர் டிரேடிங் , மார்க்கெட் மேனுபிலேஷன் என பல சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.
Unusual Whales என்ற தளம் S&P 500 futuresஇல் கால் ஆப்ஷனில் 12,600 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டது என்றும் கச்சா எண்ணெயில் பியூச்சர்ஸில் 1,615 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்ட்கள் விற்கப்பட்டது என்றும் சில நிமிடங்களிலேயே இது நடந்தது என்றும் கூறுகிறது. அதாவது பங்குச்சந்தை தொடங்கி 20 நிமிடங்களிலேயே 820 கோடி ரூபாய் லாபம் பார்க்கப்பட்டு இந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது என பல முதலீட்டாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
டிரம்பின் அறிவிப்பு குறித்து முன் கூட்டியே அறிந்து லாபம் பார்த்தது யார், இது குறித்து அமெரிக்க பங்குச்சந்தை உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கமாக ப்ரீ மார்கெட் சமயத்தில் மந்தமாக இருக்கும் வர்த்தகம் நேற்று மட்டும் பிஸியானது எப்படி, வழக்கத்தை விட 6 மடங்கு அதிக பணம் சந்தைக்கு வந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.இதற்கு முன்பு டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்த போதும் இதே போல பங்குச்சந்தையில் வழக்கத்துக்கு மாறாக பெரிய பணம் வந்து சென்றது என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications