புதிதாகப் பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு பல பகுதிகளில் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பா, இந்தியா உட்பட பல நாடுகளில் பிரிட்டன் நாட்டில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பிரிட்டனில் தற்போது புதிதாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றில் 70 சதவீதம் பிறருக்கு பரவக்கூடியதாக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் கொரோ தொற்றின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி இழப்பு..!

பங்குசந்தை வீழ்ச்சி
அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலிருந்து வந்த இந்த முதலீட்டுச் சந்தை, இன்று ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று முதலீட்டாளர்களை, இந்தியச் சந்தையையும் பயமுறுத்தியுள்ளது.

முதலீட்டாளர்கள்
பிரிட்டன் நாட்டின் கொரோனா தொற்றுக் காரணமாக அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளின் அளவு பெருமளவில் குறைந்துள்ள நிலையில், அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறிய நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 வார சரிவை சந்தித்துள்ளது.

ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.79 ரூபாயாகச் சரிந்து 2 வார சரிவைப் பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகச் சந்தை முடிவில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.57 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் சரியும்
இதேபோல் உலக நாடுகள் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கச்சா எண்ணெய் தேவை குறையும். இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை சுமார் 2 டாலர் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
ஏற்கனவே கச்சா எண்ணெய் பழைய விலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில் இன்றைய சரிவு கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 2.06 டாலர் சரிந்து 50.20 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 1.95 டாலர் சரிந்து 47.15 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.