பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் தனது நாணய கொள்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் அமெரிக்க டாலர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10.14% வீழ்ச்சி அடைந்துள்ளது, இதன் மூலம் ஆசியாவிலேயே மிகவும் மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது இந்திய ரூபாய். 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக அதிகப்படியான அளவு வருடாந்திர சரிவை பதிவு செய்துள்ளது.
டாலர் ஆதிக்கம் அடைந்த காலகட்டத்தில் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
டாலர் - ரூபாய்
2021 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.33 ஆக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.72 ஆக உள்ளது. அதே நேரத்தில் டாலர் குறியீடு 2015 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய வருடாந்திர லாபத்தை அடைந்துள்ளது.
பணவீக்கம்
2022 ஆம் ஆண்டில் வல்லரசு நாடான அமெரிக்கா அந்நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கத் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் அதிகரித்தது. இதன் மூலம் உலகளவில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் அமெரிக்கப் பத்திர சந்தையில் குவிந்தது.
ஜப்பான் யென்
இதனால் டாலர் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாய் மதிப்பு உட்பட அனைத்து நாணயங்களின் மதிப்பும் சரிந்தது. இந்த நிலையில் இந்திய ரூபாயை விட 2022 ஆம் ஆண்டில் அதிகமாக வீழ்ச்சியடைந்த ஒரே ஆசிய நாணயம் ஜப்பான் நாட்டின் யென் மட்டுமே. ஜப்பான் யென் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு 12 சதவீதத்திற்கும் மேல் 2022ல் சரிந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்விற்கும் இந்திய ரூபாய் 2022ல் பலியானது என்றால் மிகையில்லை. இது செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகபட்சமாக உயர்த்தி நாட்டின் நிதிநிலை மற்றும் ரூபாய் மதிப்பை மோசமாக்கியது.
ரூபாய் மதிப்பு உயர்வு
2023 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் வேளையில் சந்தை வல்லுனர்கள் ரூபாய் மதிப்பு உயர்வுடன் வர்த்தகம் செய்யும் என்று நம்புகிறார்கள். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் முதல் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் வரையில் விலைகளைத் தளர்த்தும். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளைத் தொடர்ந்து வாங்குவார்கள் என்று நம்புகிறார்கள்.
முதல் காலாண்டு கணிப்பு
பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் நாணய சந்தை ஆய்வாளர்கள் இந்திய ரூபாய் முதல் காலாண்டில் 81.50 - 83.50 வரம்பிற்கு இடையில் வர்த்தகம் செய்யப்படும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்வார்கள் எனக் கணிக்கப்படுகிறது.
நடப்பு கணக்குப் பற்றாக்குறை
இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் 2022 காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் அதாவது ஜூன் காலாண்டில் ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்தது. 2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவு செப்டம்பர் காலாண்டில் 36.4 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.


Click it and Unblock the Notifications