இந்திய ரூபாய் மதிப்பு திங்கட்கிழமை வரத்தகத்தில் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 92.33 என்ற அளவை தொட்டு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது என்றால் மிகையில்லை.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 91.74 அளவில் பதிவான நிலையில், இன்று 0.50% சரிந்து அதாவது 59 பைசா குறைந்து 92.33 அளவில் உள்ளது. 50 பைசா என்பது சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் தினசரி பல பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கும் இந்தியாவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்த ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்து 117 டாலர் அளவீட்டை தொட்டது மூலம் இந்திய ரூபாய் மதிப்பை பெரிதும் பாதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கடந்த 2 -3 நாட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது, குறிப்பாக கடைகளில் எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக் கேரி பேக் பெரிய அளவில் உயர்ந்துள்ளது என கடைக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் உயர்வு - ரூபாய் சரிவு
கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளியிலிருந்து 28% உயர்ந்து திங்களன்று $117-ஐ எட்டியது. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை மொத்தமாக 28 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்த நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளது. இது வெளிநாட்டு கச்சா எண்ணெய் மட்டுமே அதிகமாக நம்பியிருக்கும் இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும், இந்திய ரூபாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்பிஐ தலையீடு
சந்தை துவங்குவதற்கு முன்பே ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு பரிவர்த்தனை சந்தையில் தலையீடு செய்திருக்கலாம் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டாலர்களை விற்று ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் ரூபாய் 92.30-இலிருந்து 92.20-க்கு தற்காலிகமாக மீண்டது.
ஆனால் உலகளாவிய ரிஸ்க்-ஆஃப் மனநிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்தது. இந்த நிலையில் ரூபாய் மதிப்பு 93.00 வரை செல்லலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாய் மதிப்புக்கு தற்போது ஆதரவு நிலை 91.10-ஆகவும், எதிர்ப்பு நிலை 92.00-ஆகவும் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு என்ன பொருள்?
எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இறக்குமதி செலவு உயரும், ரூபாய் மதிப்பு குறையும், பெட்ரோல்-டீசல் விலை உயரும். இதன் வாயிலாக உணவு, போக்குவரத்து, உற்பத்தி செலவுகள் உயரும்.
இதன் விளைபொருளாக நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் இந்த சூழலை கவனமாக கண்காணிக்க வேண்டும். முக்கியமாக நீண்டகால முதலீட்டாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குறுகிய கால முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்போலியோவை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
மொத்தத்தில், ரூபாய் 92.33 என்ற வரலாறு காணாத குறைந்த அளவை குறைந்துள்ளது வெறுமனே முதலீட்டு சந்தையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளையும் பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications