அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 24 பைசா சரிந்து, புதிய குறைந்தபட்ச அளவான 90.56 ஆக குறைந்துள்ளது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை நிலவும் இதேவேளையில் மெக்சிகோ-வும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரையிலான வரியை விதித்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்த பின்பும் இந்திய சந்தையில் இருந்து தொடர்ச்சியாத வெளிநாட்டு முதலீட்டாளர்களின் டாலர் முதலீடு வெளியேறி வருகிறது. இதன மூலம் இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகளவில் பாதித்துள்ளது தெரிகிறது.
அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சி குறித்து கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் சர்வதேச விலை உயர்வால் இறக்குமதியாளர்கள் அதிக டாலர்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே ரூபாய் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் டாலர் கொள்முதல், ரூபாய் மதிப்பு மேலும் சரிவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாகக் உள்ளது என விளக்கியுள்ளனர்.

இன்டர்பேங்க் அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 90.43 ஆகத் தொடங்கி, பின்னர் 90.56 ஆக சரிந்தது. ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவிலிருந்து 24 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை அன்று, ரூபாய் 38 பைசா சரிந்து, வரலாற்று குறைந்தபட்ச அளவாக 90.32 ஆக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 90.56 வரையில் சரிந்துள்ளது.
Finrex Treasury Advisors LLP நிறுவனத்தின் கருவூலத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் குமார் பன்சாலி இது குறித்துக் கூறுகையில், "இன்றைய வர்த்தகத்திற்கு ரூபாய் 90 முதல் 90.60 வரம்பில் இருக்கும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக குழுக்களின் பேச்சுவார்த்தையின் கடைசி நாள் இன்று. அதன் பிறகு ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலத்தை அளவிடும் டாலர் குறியீடு, 0.02 சதவீதம் அதிகரித்து 98.37 ஆக வர்த்தகமானது. உலகளாவிய கச்சா எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், ஃபியூச்சர் வர்த்தகத்தில் ஒரு பேரல் 61.69 அமெரிக்க டாலராக, 0.67 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 170.40 புள்ளிகள் அதிகரித்து 84,988.53 ஆகவும், நிஃப்டி 98.40 புள்ளிகள் உயர்ந்து 25,996.95 ஆகவும் வர்த்தகமானது. பங்குச்சந்தை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் ஆதாவது ஆர்பிஐ, பெட் முடிவுகளுக்கு பின்பும் ரூ. 2,020.94 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications