இந்தியா: உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. எனவே இதனை சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அதிகப்படியான ரஷ்யா வர்த்தகம் செய்து வருகிறது.
இதில் இந்தியா உடனான வர்த்தகத்திற்கு நேரடியாக ரூபாயையே பயன்படுத்துகிறது. இதனால் ரஷ்யாவுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் இந்திய வங்கிகளில் கிடக்கிறது.

பொருளாதார தடைகளால் இந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் இருக்கும் ரஷ்யா, இதற்கு ஒரு தீர்வாக இந்திய வங்கிகளில் உள்ள தங்களுக்கு சொந்தமான ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் அரசு பத்திரங்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதனை அடுத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. பல்வேறு நாடுகளும் ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.
இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டது. எனவே இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளோடு ரஷ்யா நேரடி வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கியது. அதாவது டாலரில் இல்லாமல் இந்தியாவுடன் ரூபாயிலேயே வர்த்தகம் செய்தது.
இதற்காக இந்திய வங்கிகளுக்கும் ரஷ்ய வங்கிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு ஸ்பெஷல் ருபி வோஸ்ட்ரோ அக்கவுண்ட் (special rupee vostro account) தொடங்கப்பட்டது. அதாவது இந்திய நிறுவனங்கள் ரூபாயில் தொகையை செலுத்தி விடும், அவை வங்கிகளில் உள்ள வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் ரஷ்ய வங்கிகளுக்கு மாற்றப்படும்.
ஆனால் மேற்கத்திய நாடுகளின் தடை அமலில் இருப்பதால், பணத்தை பெறுவதற்கான சர்வதேச கட்டமைப்புகளை ரஷ்யாவால் பயன்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக ரஷ்யா நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய ஏராளமான பணமானது இந்திய வங்கிகளிலேயே குவிந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக ரஷ்யாவுக்கு சொந்தமான இந்த பணமானது இந்தியாவில் முதலீடு செய்யப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, எங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் இந்திய வங்கிகளில் இருக்கிறது, அதனை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே அதனை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்" எனக் கூறியிருந்தார்.
இதனை அடுத்து ஆர்பிஐ இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது.ரூபாய் கணக்கு வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்ற மாற்றத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் அடிப்படையில் ரஷ்யா நிறுவனங்கள் தற்போது இந்திய பங்குச் சந்தை மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications