ரஷ்யா ராணுவப் படைகள், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோ நகர அரசு, ராணுவத்தில் சேரும் குடிமக்களுக்கு பெரும் நிதி தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஷ்ய மக்களை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது. உக்ரைன் உலக நாடுகளிடம் இருந்து நிதி திரட்டுவதற்கு போராடி வரும் நிலையில் ரஷ்ய அரசின் இந்த அறிவிப்பு உக்ரைனில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்கோ மேயரின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிதாக ராணுவத்தில் சேரும் நபருக்கு 1.9 மில்லியன் ரூபிள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 18,00,000 ரூபாயைத் தொடக்கக் கட்டணம் பெறுவார்கள், மேலும் முதல் ஆண்டு மொத்த சம்பளமாக 5.2 மில்லியன் ரூபிள் அதாவது 50,00,000 ரூபாய் வரையில் பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் மாஸ்கோவின் ஒப்பந்த ராணுவ வீரரின் வருடாந்திர சம்பளம், ரஷ்ய நாட்டின் சராசரி குறைந்தபட்ச ஊதியத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இவ்வளவு பெரிய தொகையை அறிவிக்கப்பட்டது மூலம் பல பொருளாதார வல்லுனர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், இத்தகைய அதிகப்படியான ஊக்கத்தொகை ரஷ்யா பெரும் படையைத் திரட்ட உதவியது என்றாலும் அதிகப்படியான சம்பளம் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
ரஷ்யாவில் இந்த ஆண்டு சுமார் 190,000 பேர் உக்ரைன் எல்லையில் பாதுகாப்புப் படையில் சேர்ந்து போரிடத் தானாக முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டில் முன்வந்த 490,000 பேருடன் சற்று குறைவாகும், ஆனால் இந்த புதிய ஊக்கத் தொகை கட்டாயம் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பெற முடியும்.
புதிய ராணுவத்தில் சேர்வோருக்குச் சம்பளம், தொடக்கப் போனஸ், கூடுதலாக மத்திய மாநில அரசு பயன்கள், சலுகைகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் அலுவலகம் அறிவித்தபடி புதிய சம்பள கட்டமைப்பு உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளதாம்.
இதோடு நிற்கவில்லை கூடுதலாக, போரில் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து $5,690 முதல் $11,390 வரை பணம் அளிக்கப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு $34,150 இழப்பீடும் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications