ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரான் முழு கட்டுப்பாட்டை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்த பாதையில் ஏற்றுமதி நடைபெறுகிறது. இதனால் உலக எண்ணெய் சந்தையில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில் இந்தியா மற்றும் சீனாவுக்கு எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க தயாராக உள்ளதாக ரஷ்யா-வின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் புதன்கிழமை அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடக்கவில்லை எனில் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் இந்த நிலையில் ரஷ்யா முன்வந்துள்ளது இந்தியாவுக்கு பெரிய நன்மையாக உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரான் கட்டுப்பாடு
ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை அதிகாரி மொஹம்மத் அக்பர்சாதே, "ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசின் கடற்படை முழு கட்டுப்பாட்டில் உள்ளது" என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த பாதையில் செல்லும் எந்த கப்பலாக இருந்தாலும் சரி ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் தாக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த அறிவிப்பு உலக எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்யாவின் வாய்ப்பு
ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 1 மில்லியன் பேரல்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டது. சவுதி அரேபியா 30 சதவீதம் அதிகரித்து 1 மில்லியன் பேரல்களுக்கு மேல் அனுப்பியது.
இப்போது ஹார்முஸ் பாதை அச்சத்தில் இருப்பதால், ரஷ்யா தனது விநியோகத்தை இந்தியா மற்றும் சீனாவுக்கு அதிகரிக்க தயாராக உள்ளது. இது இந்தியாவின் எண்ணெய் தேவையை பாதுகாப்பாக பூர்த்தி செய்ய உதவும்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் எண்ணெய் விலை பயங்கரமாக உயரும். இது பணவீக்கத்தை தூண்டும். ஆனால் ரஷ்யா விநியோகத்தை அதிகரித்தால் இந்த அபாயம் குறையும்.
இந்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது, இதேபோல் அமெரிக்காவின் ரெசிப்ரோக்கல் வரி அச்சம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதால் கூடுதல் நன்மை அளிக்கிறது. இந்தியாவில் 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல் - டீசல் விலை மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications