இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் பல தசாப்தங்களாக இருந்தாலும், உக்ரைன் போருக்குப் பின்பு வர்த்தகம், பொருளாதாரம் பெரிய அளவில் வலுவடைந்து வருகின்றன. இந்த புதிய பயணத்தில் முக்கிய மைல்கல்லாக ரயில் தயாரிப்பு துறையில் இரண்டு நாடுகளும் புதிய அத்தியாயத்தைத் துவங்க உள்ளது.
ரஷ்யா அதன் உள்நாட்டு ரயில்வே துறைக்குத் தேவையான உதிரிப்பாகங்களைச் செய்வதற்காகவும், இந்தியாவின் உற்பத்தி திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் இந்தியாவில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு செய்ய உள்ளது.

ரஷ்யா நிறுவனம்: TMH என்ற ரஷ்ய ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் லிபா இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் முதலீட்டுத் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.இந்தியாவின் உற்பத்தி துறைக்கு இருக்கக் கூடி சாதகமான கொள்கைகள் மற்றும் சலுகைகள் TMH நிறுவனத்திற்குப் பெரிதும் பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு லாபம்: TMH முதலீட்டின் மூலம் அமைக்கப்படும் தொழிற்சாலையில் உள்நாட்டுச் சந்தைக்கும் ரஷ்யாவிற்கும் தேவையான ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் இயக்கத்திற்கான உதிரிப்பாகங்களைத் தயாரித்து விநியோகிக்க TMH திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் TMH நிறுவனத்தின் தொழில்நுட்பம், ப்ராடெக்ட் டிசைன் ஆகியவை இந்தியாவுக்குக் கிடைக்க உள்ளது.
ரஷ்யா வந்தே பாரத் தொடர்பு: இந்திய ரயில்வேயுடன் 1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகளை உற்பத்தி செய்து 35 ஆண்டுகள் பராமரிக்கும் ரூ. 55,000 கோடி ஒப்பந்தத்தை Kinet Railway Solutions மூலம் TMH ஏற்கனவே பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உட்பட பல்வேறு சப்ளையர்களிடமிருந்து உதிரிப்பாகங்களை TMH பெற்று வருகிறது.
முதல் தொழிற்சாலை: இப்படி சிறிதும் பெரிதுமாகப் பல திட்டங்களில் ரஷ்ய ரயில்வே துறை நிறுவனங்கள் இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து பணியாற்றும் வேளையில், தற்போது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒரு தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
சென்னைக்கு வாய்ப்பு: இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்தியாவில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் கட்டமைப்புகளை உருவாக்குவதில் சென்னை ICF முன்னோடி. இதனால் சென்னையில் TMH நிறுவனத்தின் முதலீடுகள் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதேவேளையில் சென்னையில் இருந்து கப்பல் போக்குவரத்து மூலம் உலகின் எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் வசதி இருப்பதால் கூடுதல் வாய்ப்பு சென்னைக்கு உள்ளது.
உக்ரைன் போர்: ரஷ்யா மீதான தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை மற்றும் தடைகள் இருந்த போதிலும், இந்தியா உடன் போருக்கு பின்பும் பல வகையில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த ரயில்வே துறை முதலீட்டு திட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று லிபா உறுதியளித்துள்ளார்.
மறுமுதலீடு: பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு இந்த முதலீட்டின் மூலம் புதிய துறையில் வலுவாகும். இரண்டு நாடுகளும் ரயில் துறையில் புதிய பாதையில் பயணிக்க உள்ளது. இதைவிட முக்கியமாக ரஷ்யாவில் இருந்து வாங்கப்படும் எண்ணெய்க்கு இந்திய நிறுவனங்கள் ரூபாயில் செலுத்தி வரும் வேளையில், இதை மறுமுதலீடு செய்யும் வாய்ப்பாகவும் இந்த தொழிற்சாலையைப் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications