எந்தவொரு நிறுவனமும் வளர்ச்சி காண வேண்டுமானால் அதற்கு முதலில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வேலை பார்க்க வேண்டும். இதனை புரிந்த நிறுவனங்கள், தாங்கள் நிர்ணயிக்கும் இலக்கை எட்டினால் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கின்றனர். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதைதான்.
இத்தகைய கட்டமைப்பில் ஒரு நிறுவனத்தின் வருவாயும் பெருகும், ஊக்கத்தொகை கொடுப்பதால் பணியாளருக்கும் சந்தோஷம். உதாரணமாக ஒரு சிறு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் தனது விற்பனையாளரிடம் இந்த மாதத்தில் 500 பெட்டிகள் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு கொடுக்கும். அந்த இலக்கை எட்டினால் விற்பனையாளருக்கு தனியாக ஊக்கத்தொகை வழங்கும்.

இது அந்த விற்பனையாளருக்கு மகிழ்ச்சி மற்றும் இன்னும் விற்பனையை அதிகரிக்க உந்துதலை கொடுக்கும். ஒரு சின்ன நிறுவனமே தனது விற்பனை அதிகரிக்க பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் போது, ஒரு பெரிய விமான சேவை நிறுவனம் எந்த அளவுக்கு வழங்கும்?.
அயர்லாந்தை சேர்ந்த ஒரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் தனது தலைமை நிர்வாக அதிகாரிக்கு ரூ.905 கோடி போனஸ் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் அவருக்கு வைத்துள்ளது.
அயர்லாந்தின் பிரபலமான விமான சேவை நிறுவனம் ரியானேர் ஹோல்டிங்ஸ், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் மைக்கேல் ஓ லியரி. கடந்த 1994ம் ஆண்டு முதல் அவர் அந்த பதவியில் இருக்கிறார். அந்த நிறுவனத்தின் ஆண்டு லாபம் 185 கோடி முதல் 205 கோடி யூரோ என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு விலை 13 யூரோவுக்கு கீழ் இருந்தது.
இந்த சூழ்நிலையில், ரியானேர் நிறுவனம் தனது பங்குகளின் விலை உயர வேண்டும் மற்றும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பியது. இதனையடுத்து, சி.இ.ஒ. மைக்கேல் ஓ லியரியை அழைத்து, நாங்க சொல்ற 2 விஷயத்தில் ஒன்னை செய்து முடித்தால் கூட உங்களுக்கு ரூ.905 கோடி போனஸ் தருகிறோம் என்று ரியானேர் நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது.
அதாவது பங்குச் சந்தையில் 28 நாட்கள் ரியானேர் பங்கு விலை 21 யூரோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும் அல்லது நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 220 கோடி யூரோவை தாண்ட வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை சாதித்தாலும் ரூ.905 கோடி போனஸ் கொடுப்பதாக மைக்கேல் ஓ லியரியை உசுப்பேத்தியது.
இந்த இலக்கை எட்டி போனஸ் வாங்குவது எல்லாம் கனவு என்று நினைத்தால் அது நம்ம தவறு. பங்கு சார்ந்த விஷயத்தில் வெற்றி பெற்று மைக்கேல் ஓ லியரி 100 மில்லியன் யூரோ, அதாவது ரூ.905 கோடி போனஸை வாங்க போறார்.
இந்த ஆண்டில் ரியானேர் பங்கு விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கின் விலை 18.84 யூரோவாக உள்ளது. மேலும் அடுத்த 12 மாதங்களில் அந்நிறுவன பங்கு விலை சராசரியாக 24.10 யூரோ விலையில் மேலும் உயரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் மைக்கேல் போனஸ் வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ரியானேர் நிறுவனம் போனஸை பங்குகள் வடிவில் வழங்க உள்ளது. ஒரு பங்கின் விலை 11.12 என்ற விலையில் மொத்தம் 1 கோடி பங்குகளை மைக்கேல் ஓ லியரிக்கு நிறுவனம் வழங்கும். இந்த ஊக்கத்தொகை திட்டத்தை 2028ம் ஆண்டு வரை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
மைக்கேல் ஓ லியரி அயர்லாந்தின் டப்ளினில் வசித்து வருகிறார். டிரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்தவுடன் கேபிஎம்ஜி நிறுவனத்தில் கணக்காளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ரியானேர் நிறுவனத்தின் நிறுவனர் டோனி ரியானின் நிதி ஆலோசகரகாக பணியாற்றினார். 1988ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணியமர்த்தப்பட்டார்.
1994ல் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார். அது முதல் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார். 2018ம் ஆண்டு நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகமாக இருந்தது. மேலும் இவருக்கு சொந்தமாக பல பந்தய குதிரைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications