தற்போது எந்த கோவிலில் பார்த்தாலும் கருப்பு உடையில் அலைமோதும் கூட்டத்தை பார்க்க முடிகிறது. அதிலும் அதிகாலையில் எழுந்து குளித்து பஜனையில் ஈடுபடும் சபரிமலை பக்தர்கள் ஒரு புறம்.
மறுபுறம் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால், சபரிமலையில் வருவாய் கொட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கபட்டது. இந்த நிலையில் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஆண்டில் 28 நாட்களில் வெறும் 64 கோடி ரூபாய் வசூல் மட்டுமே செய்யப்பட்டிருந்ததாகவும், இதே நடப்பு ஆண்டில் 104.72 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் என் வாசு தெரிவித்துள்ளார்.
அன்னதான திட்டத்துக்காக பக்தர்கள் வழங்கிய காணிக்கை, பிரசாத விற்பனை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது.
ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை சபரிமலைக்கு வந்து செல்லும் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், கோயிலின் வருவாயும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் வருவாய் போராட்டங்களால் ஐயப்பனை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. ஆனால் தற்போதைய சூழல் மிகவும் அமைதியாக உள்ளதாகவும், பக்தர்களுக்கு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களிலும் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடந்த வருடத்தை விட இவ்வருடம் கோயில் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணிநேரம் முன்னதாக 3 மணிக்கும், மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டது. இதேபோல இரவு 11 மணிக்குப் பதிலாக 11.45 மணிக்கு நடை சாத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications