இந்தியாவின் முன்னணி கண்ணாடி தயாரிப்பாளர் மற்றும் வீட்டு வசதி சேவை நிறுவனமான செயின்ட் கோபைன், தமிழ்நாட்டில் ஏற்கனவே பெரும் தொழிற்சாலையை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் வேளையில், அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளது.
செயின்ட்-கோபைன் அடுத்த 4-5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.8,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி செய்த நிலையில், இதன் ஒரு பகுதியாக தன்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய சுமார் ரூ.3,400 கோடி முதலீடு செய்வதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது. செயின்ட்-கோபைன் தமிழ்நாட்டில் பல கிரீன் பீல்டு, பிரவுன் பீல்டு முதலீடுகளை செய்யதுள்ளது குறிப்பிடத்தக்கது.

செயின்ட்-கோபைன் இந்த 3400 கோடி ரூபாய் முதலீட்டை கண்ணாடி கம்பளி (glass wool), ஜிப்சம் ப்ளாஸ்டர்போர்டு, பிளாஸ்டர், அக்வஸ்டிக் சீலிங், ப்ளோட் கிளாஸ், சோலார் கிளாஸ், பசைகள், சீலண்ட்கள், மோட்டார் மற்றும் பீங்கான்கள் என பல்வேறு தொழில்களில் தமிழ்நாட்டை மைய உற்பத்தி தளமாக கொண்டு விரிவாக்க திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளம் என செயின்ட்-கோபைன் ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயின்ட்-கோபைன் இந்தியா தலைவர் கூறினார்.
செயின்ட்-கோபைன் குளோபல் போர்டு தலைவர் Pierre-Andre de Chalendar மற்றும் சிஇஓ Benoit Bazin ஆகியோர் தமிழக முதல்வர் MK ஸ்டாலின் மற்றும் மாநில அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்த பிறகு 8000 கோடி ரூபாய் முதலீட்டு வாக்குறுதியில் 3400 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் கண்ணாடி தயாரிப்பாளர் செயின்ட்-கோபைன் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்த செயிண்ட்-கோபைன் இந்தியா. சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பிற தொழிற்சாலைகள் மூலம் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு தேவையான பொருட்களும் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உற்பத்தி துறை நிறுவனங்கள் வரும் காரணத்தால் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை நாட்டின் சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே உள்ளது. செயின்ட் கோபைன் முதலீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்றாலும் விரைவாக முதலீடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications