இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வருவது JSW குழுமம் மற்றும் ஷாங்காய் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SAIC மோட்டார் கார்ப்-க்கு சொந்தமான பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான MG எனப்படும் மோரிஸ் கேராஜ்-ன் இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதியை வாங்குவது தான்.
இந்த பேச்சுவார்த்தை குறித்தும், பல்வேறு முன்னேற்றங்கள் நடந்து வருவதாக பல செய்திகள் வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சஜ்ஜன் ஜிண்டால். இந்திய ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைய பல முறை சஜ்ஜன் ஜிண்டால் முயற்சி செய்த நிலையில் மோரிஸ் கேராஜ் இந்திய வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்து வெளியான தகவலை அனைத்து தரப்பினரும் நம்பினர்.

இன்று JSW குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், JSW ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட JSW குரூப் நிறுவனங்கள் என எந்த தரப்பும் MG மோட்டார் இந்திய வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்த திட்டத்தை நிர்வாகத்திடம் வைக்கவில்லை. இதுகுறித்து எவ்விதமான ஆலோசனையும் நடக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
இதன் மூலம் MG மோட்டார் இந்திய நிறுவனம் தொடர்ந்து சீன நிறுவனமாகவே இந்தியாவில் செயல்பட உள்ளது. கடந்த வாரம் வெளியான தகவல் படி இரு தரப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தானால் MG மோட்டார் இந்தியா நிறுவனத்தில் SAIC மோட்டார் கார்ப் 51 சதவீத பங்குகளையும், 32-35% சதவீத பங்குகளை சஜ்ஜன் ஜிண்டால்-ம் பெற உள்ளதாகவும். மேலும் இந்திய நிதி நிறுவனங்களிடம் 8 சதவீத பங்குகளும், எம்ஜி இந்தியாவின் டீலர்கள் மற்றும் ஊழியர்களிடம் 6-7 சதவீத பங்குகளும் இருக்கும் என கூறப்பட்டது.

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமம், MG மோட்டார்ஸ் உடன் இணைந்து புதிதாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாகவும், இதற்காக இக்கூட்டணி சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலையை வாங்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. தற்போதைய விளக்க அறிக்கை மூலம் இதுவும் நடக்காது.


Click it and Unblock the Notifications