ஓமன் நாட்டின் குறைந்த விலை பட்ஜெட் விமான நிறுவனமான சலாம்ஏர் (SalamAir), சென்னையில் தனது சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. இந்த புதிய இணைப்பு, தென்னிந்திய பயணிகளுக்கு வசதியான மற்றும் மலிவான பயணத் தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரை, சலாம்ஏர் விமான நிறுவனத்தின் புதிய வருகையின் மூலம் பயணிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவரிக்கிறது.
ஜூலை 11-ஆம் தேதி முதல், ஓமனின் சலாம் ஏர் விமான நிறுவனம், ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் சென்னைக்கு விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது ஜூலை 12 முதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லி, கெய்ரோ, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்ளிட்ட சமீபத்தில் தொடங்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இப்போது சென்னையும் இணைந்துள்ளது. எமிரேட்ஸ், எதிஹாத், கத்தார், சவுதி ஏர்லைன் மற்றும் ஓமன் ஏர் போன்ற வளைகுடா விமான நிறுவனங்கள் ஏற்கனவே சென்னை மற்றும் மேற்கு ஆசியா இடையே விமானங்களை இயக்குகின்றன.
சென்னைக்கு எங்கள் புதிய சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று சலாம்ஏர் வருவாய் மற்றும் நெட்வொர்க் இயக்குனர் ஹரிஷ் குட்டி தெரிவித்துள்ளார்.
சலாம் ஏர் ஓமனை தளமாகக் கொண்ட முதல் குறைந்த விலையில் பயணிகளுக்காக இயக்கப்படும் விமானம். பானங்கள் மற்றும் சிற்றுண்டிப் பொருட்களைத் தவிர அவர்களால் வழங்கப்படும் வெஜ் மற்றும் நான் வெஜ் உணவுகள் பலவகைகளில், இந்த வகை விமானங்களில் கிடைக்கின்றன.
சலாம் ஏர் சென்னைக்கு இயங்கத் தொடங்கியதும், மற்ற வளைகுடாவைச் சேர்ந்த விமானங்களின் சேவைகளின் நிறைய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம், அவற்றுள் இருக்கும் போட்டி காரணமாக விமான டிக்கெட் கட்டண குறைப்பு போன்றவை ஏற்படலாம் என்று ஏரோ டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் பி.முருகேசன் கூறியுள்ளார்.
இதன் மூலம், மிடில் ஈஸ்ட் மற்றும் இந்தியா இடையே, குறிப்பாக சென்னைக்கு இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களாலும் சிறந்த சேவைகள் மற்றும் கட்டணங்கள் மூலம் பயணிகளும் பொதுமக்களும் பயன்பெற முடியும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
உதாரணமாக, ஜூலை 12 ஆம் தேதி சென்னையில் இருந்து மஸ்க்கட்டிற்கு செல்லும் டிக்கெட் கட்டணம் சலாம்ஏர் விமான நிறுவனத்தில் ரூ.10,242 ஆக இருக்கும், ஓமான் ஏர் விமான நிறுவனத்தில் ரூ.12,543-ஆக இருக்கும் என்று திரு. பி. முருகேசன் தெரிவித்தார். இதன் மூலம், சலாம்ஏர் விமான நிறுவனத்தின் வருகை, சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு குறைந்த செலவில் பயணம் செய்வதற்கான புதிய வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications