உலகளவில் CRM மென்பொருள் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமாக திகழும் சேல்ஸ்ஃபோர்ஸ் மிகப்பெரிய பணிநீக்க திட்டத்தை அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்துள்ள வேளையில் தற்போது இதில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது டெக் ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேல்ஸ்ஃபோர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய ப்ராடெக்ட்களை மேம்படுத்தவும் மற்றும் விற்பனையை அதிகரிக்க கவனம் செலுத்தும் வகையில் இந்நிறுவனம் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இப்புதிய மாற்றத்திற்கு தேவையான பணியாளர்களை நியமித்து வருகிறது. அதே நேரத்தில் பணிநீக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்திகள் அடிப்படையில், சேல்ஸ்ஃபோர்ஸ் தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 700 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, ஜூலை மாதத்தில் மேலும் 300 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த பணிநீக்க படலம் 2025ஆம் ஆண்டிலும் துவங்கியுள்ளது.
இந்த பணிநீக்க நடவடிக்கைகளுக்கிடையே, சேல்ஸ்ஃபோர்ஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வர்த்தக பிரதிநிதிகளை (virtual representatives) உருவாக்கும் தனது "ஏஜென்ட்ஃபோர்ஸ்" (Agentforce) தளத்தின் மூலம் டிசம்பர் மாதத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை இந்நிறுவனம் முடித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோஃப் அறிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் தனது ப்ராடெக்ட் எண்ணிக்கையை மேம்படுத்தவும், எதிர்கால வர்த்தகம் மற்றும் வருமான வளர்ச்சியைத் தூண்டவும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது.
பிப்ரவரி 26 ஆம் தேதி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இந்த அறிக்கை நிறுவனத்தின் நிதி செயல்திறன் மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சந்தையில் அதன் மூலோபாய முன்னுரிமைகள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்கும்.
மேலும் தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மற்ற பிரிவுகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications