உலகளவில் ஐடி பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கவிட்டது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான சேல்ஸ் போர்ஸ் (Salesforce) நடப்பாண்டில் தங்கள் நிறுவனம் மென்பொருள் பொறியாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
சேல்ஸ் போர்ஸ் என்பது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் தங்கள் நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஏஜென்ட் ஃபோர்ஸ் (Agentforce) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளார்.

தற்போது தங்கள் நிறுவனத்தின் கவனம் முழுவதும் ஏஜென்ட் ஃபோர்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது என அவர் கூறியுள்ளார். ஏஜென்ட் ஃபோர்ஸ் ஏஐ மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வாயிலாக தங்களுடைய நிறுவனம் ஏற்கனவே பொறியியல் செயல்திறனை 30 சதவீதத்துக்கும் மேல் மேம்படுத்தி இருப்பதாக அந்த பாட்காஸ்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவன செயல்திறனும் இதனால் மேம்பட்டிருப்பதாக கூறும் அவர், இந்த ஆண்டில் தங்கள் நிறுவனம் புதிதாக எந்த ஒரு மென்பொருள் பொறியாளரையும் பணிக்கு எடுக்காது என தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தில் சப்போர்ட் இன்ஜினியர் பணியில் இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை இனி குறையும் என தெரிவித்த அவர் சேல்ஸ் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது ஆயிரமாக இருக்கக்கூடிய சேல்ஸ் பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை 2000 ஆக உயரம் என்றும் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து சந்தைப்படுத்தும் திறன் கொண்ட விற்பனை பிரதிநிதிகளை தங்கள் நிறுவனம் தேர்வு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக சேல்ஸ் போர்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சாரியா எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தங்கள் நிறுவன செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை அதிகரித்து வருவதாக கூறியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இதனால் உங்களின் வேலை வாய்ப்பு பறிபோகாது ஆனால் உங்களுடைய வேலை நிலை மாறும் என தெரிவித்திருந்தார். இந்த மாற்றம் சற்றே வலியை ஏற்படுத்துபவையாக இருக்கும் ஆனால் அது நிச்சயமாக நடக்கும் என அவர் கூறியிருந்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமக்கு சாதகமாக இருக்கிறது என்றாலும் அதனால் சில வேலைவாய்ப்புகள் பறி போகும் என்பதை மறுக்க முடியாது என்பதற்கு சேல்ஸ் போர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பே உதாரணமாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications