உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான வேன்கார்டு (Vanguard Group Inc ), சலீம் ராம்ஜியை தலைமை செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் முக்கியமான சொத்து மேலாண்மை மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பு இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்துள்ளது.
வேர்கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வரும் ஜூலை மாதம் சலீம் ராம்ஜி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்ஜி தற்போது பிளாக்ராக் என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

உலகின் இரண்டாவது பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான வேன்கார்டு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஈடிஎஃப், மியூச்சுவல் ஃபண்டுகள் என முதலீடு சார்ந்த அனைத்து ஆலோசனைகளையும் மேலாண்மை சேவைகளையும் வழங்கும் நிறுவனம் இது.
கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக வேன்கார்டு நிறுவனம் நிறுவனத்திற்கு வெளியில் இருக்கும் ஒருவரை தலைமை செயல் அதிகாரி பதவியில் நியமித்திருக்கிறது. தற்போது தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வரும் டிம் பக்கிலே முன்கூட்டியே தன்னுடைய ஓய்வினை அறிவித்துவிட்டார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக ராம்ஜி தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேன்கார்டு நிறுவனம் கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த நிறுவனம் உலகிலேயே இரண்டாவது பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக இருக்கிறது. இது தற்போது 9.3 டிரில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பு கொண்ட சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இந்த நிலையில் சலீம் ராம்ஜி வேன்கார்டு நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என நிறுவனத்தின் தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. "தற்போது உலக அளவில் முதலீட்டாளர்களின் முதலீட்டு யுக்திகள் பல மாற்றங்களை கண்டு வருகின்றன அந்த வகையில் வேன்கார்டிற்கு பல்வேறு வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதே தன்னுடைய நோக்கமாக இருக்கும்" என சலீம் ராம்ஜி தெரிவித்துள்ளார்.
சலீம் ராம்ஜி இந்திய வம்சாவழியை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பெற்றோர்கள் தான்சானியா நாட்டை சேர்ந்தவர்கள், சலீம் ராம்ஜி பிரிட்டிஷ் கோலோம்பியாவில் வளர்ந்தார். அவர் தந்தை மளிகை கடை நடத்தி வந்துள்ளார். சலீம் ராம்ஜி-யின் தாத்தா பாட்டி இந்தியர்கள் ஆவர், இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தான்சானியா நாட்டிற்கு குடியெர்ந்தவர்கள் ஆவர்.
சலீம் ராம்ஜியை பொறுத்தவரை நிதி துறையில் 25 ஆண்டுகளாக பணி அனுபவம் கொண்டவர். பிளாக் ராக் நிறுவனத்தில் தவிர்க்க முடியாத ஒரு நபராக சலீம் ராம்ஜி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பிளாக் ராக் நிறுவனத்தின் இன்டெக்ஸ் முதலீடுகள் மற்றும் ஐஷேர் பிரிவுகளின் பெரும்பாலான பகுதிகளை சலீம் ராம்ஜி தான் மேலாண்மை செய்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் பிளாக் ராக் நிறுவனம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் கண்டது. இதற்கு ராம்ஜியின் தொழில் யுக்திகளே காரணம் என தெரிய வருகிறது .
ப்ளாக்ராக்கில் பணிக்கு சேர்வதற்கு முன்பாக ராம்ஜி மெக்கன்சி நிறுவனத்தில் மூத்த தலைவராக பணியாற்றி வந்துள்ளார். அங்கே அவர் சொத்து மற்றும் நிதி மேலாண்மைகளை கவனித்து வந்தவர். எனவே நிதி துறையில் மற்றும் சொத்து மேலாண்மை, முதலீடு ஆகியவற்றில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்பதால் ராம்ஜியால் வேன்கார்டு நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என நம்பிக்கை எழுந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications