அமெரிக்கா: நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது . குறிப்பாக சாட் பாட் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு செயலிகளான சாட்ஜிபிடி, ஜெமினி,பெர்பிளெக்சிட்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இளம் தலைமுறை , பதின்ம வயதினர், சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என சாட்ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான காமன் சென்ஸ் மீடியா போல் என்ற பெயரில் ஒரு ஆய்வு அறிக்கை நடத்தப்பட்டது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பதின்ம வயதினரிடம் ஆய்வு நடந்தது.

இதில் பங்கேற்ற 72% பேர் செயற்கை நுண்ணறிவு செயலிகளை தங்களுடைய நண்பர்களாக வைத்திருப்பதாக கூறியுள்ளனர், 50 % பேர் சாட்ஜிபிடி போன்ற செயலிகள் கூறும் அறிவுரையை அப்படியே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர் . 23 % பேர் இந்த சாட் பாட் செயலிகள் கூறும் அனைத்தையும் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதாக கூறியிருக்கின்றனர்.
பதின்ம வயதினர் தங்களுடைய பிரச்சனைகளை பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விட்டு சாட் ஜிபிடி போன்ற செயலிகளிடம் பகிர்ந்து கொண்டு அதனிடம் தீர்வினை கேட்கின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாட் ஜிபிடியிடம் பேச முடியவில்லை என்றால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டதாக நினைக்கிறார்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடன் பேசும் அளவிற்கு கூட விவாதிக்கும் அளவிற்கு கூட இவர்கள் தங்களுடைய நண்பர்களிடமோ குடும்பத்தினரிடமும் எதையும் விவாதிப்பதில்லை என தெரிய வந்துள்ளது.
இது இப்படியே நீடித்தால் மனிதர்களின் நடத்தையே காலப்போக்கில் மாறிவிடும், மனிதர்களின் நினைவாற்றல் ,ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை மற்றும் சமூக ரீதியாக மற்றவர்களிடம் பழகும் திறன் ஆகியவை பலவீனப்பட்டு போகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இளைய தலைமுறையிர் அதிக அளவில் சாட் ஜிபிடி பயன்படுத்துவதும் அதை நம்புவதும் மிகவும் தவறு, ஆபத்தானது என சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார்.
சாட் ஜிபிடி மட்டுமே நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மக்கள் சாட் ஜிபிடியை அதிகம் நம்புகிறார்கள் தங்களின் மிக முக்கியமான முடிவுகளை சாட் ஜிபிடியை கேட்காமல் எடுக்க மாட்டேன் என சொல்லும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது ஆனால் இது சரியல்ல என கூறி இருக்கிறார். சிலர் தன்னிடம், சாட் ஜிபிடிக்கு என்னையும் என் நண்பர்களையும் பற்றி நன்றாக தெரியும் அது என்ன சொல்கிறதோ அதை நான் செய்வேன் என கூறுகின்றனர் , எனக்கு இதை கேட்டு வருத்தமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாலும் மனிதர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைக்கு நிகராக அது இருக்காது என அதை மட்டுமே நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications