பெரும்பாலானோருக்கு நினைத்த வேலை மற்றும் அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி இருக்கும்போது, நிதி சார்ந்த அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கக்கூடும். ஆனால், நீங்கள் எந்த நகரத்தில் வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கும். அந்த வகையில், அதிக சம்பளம் பெறும் நகரமா? அல்லது குறைந்த செலவு கொண்ட நகரமா? எது ஒருவரின் எதிர்காலத்தை மேம்படுத்தும் என்பது குறித்து சி.ஏ. மீனாள் கோயல் என்ற நிபுணர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், குருகிராமிற்கு மாறியபோது, மாதந்தோறும் ரூ.10,000 வரை கூடுதல் செலவை சந்தித்துள்ளார். இவருக்கு அங்கு, வாடகை செலவுதான் பெரும் சுமையாக இருந்துள்ளது. அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு சாதாரண 1BHK குடியிருப்பின் வாடகை மட்டும் சுமார் ரூ.25,000.

இது தவிர, பராமரிப்பு மற்றும் மின்சார கட்டணம், வாரத்தில் சில நாட்கள் வெளியில் சாப்பிடுவது (ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை), போக்குவரத்து செலவுகள், மளிகை பொருட்கள் என அவருக்கு மாதம் ரூ.45,000 செலவாகிறது.
ஆனால், பெங்களூருவில் அப்படி இல்லை. அதே போன்ற வசதிகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்டின் வாடகை சுமார் ரூ.18,000 தான். மளிகைப் பொருட்கள், உணவு மற்றும் கால் டாக்ஸி கட்டணங்களும் குருகிராமை விட குறைவாகவே இருந்தன. பெங்களூருவில் அவரது மாத செலவு ரூ.35,000 என்ற அளவில் தான் இருந்தது.
மாதத்திற்கு சுமார் ரூ.10,000 வித்தியாசம் என்பது சிறியதாக தோன்றலாம். ஆனால், இதை ஓராண்டுக்கு கணக்கிட்டு பார்த்தால், ரூ.1 லட்சத்திற்கு மேல் பணத்தை இழக்கிறோம். இந்த தொகையைச் சேமிக்கவோ, முதலீடு செய்யவோ அல்லது புதிய தொழில் முயற்சிகளில் பயன்படுத்தவோ முடியும்.
இந்த ரூ.10,000 இடைவெளிதான், தனது அன்றாட வேலையை தாண்டி ரிஸ்க் எடுப்பதற்கான மன தைரியத்தையும், சேமிப்பையும் பாதிப்பதாக அவர் கூறுகிறார். வெற்றிக்கான தேடல் என்பது கடின உழைப்பை மட்டும் சார்ந்தது கிடையாது. நீங்கள் வேரூன்றியிருக்கும் இடத்தையும் பொறுத்தது. சில நகரங்கள் உங்கள் சம்பளத்தை முழுமையாக செலவழிக்க தூண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல பயனர்கள், குருகிராமில் உண்மையிலேயே செலவு அதிகம் ஆகும் என்றும், வாழ்க்கையை தொடங்கும் ஆரம்ப நிலையில் வாழ்க்கை செலவு தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அதேசமயம், குருகிராமில் சம்பளம் அதிகமாக இருப்பதால், கூடுதல் செலவுகளை இருந்தால் கூட சமாளித்துக் கொள்ளலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், பெங்களூரு உண்மையில் குருகிராமை விட சிக்கனமானது என்பதை இப்போது தெரிந்து கொண்டோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications