சென்னையில் சாம்சங் ஊழியர்கள் கடந்த 4 வாரங்களாகப் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களின் உற்பத்தி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை காவல் துறை சாம்சாங் தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய சுமார் 600 தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களை கைது செய்துள்ளது.
சென்னை சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 1000 ஊழியர்கள் இந்த ஆலையின் அருகே கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 4 வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்தில், இன்று தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர், அப்போது காவல் துறையினர் 600 பேரைக் கைது செய்துள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் தொழிற்சங்கம் அமைக்க ஒப்புதல் போன்ற முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சாம்சங் நிறுவனத்தின் மொத்த இந்தியச் சந்தையின் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை, சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் பெறுகிறது என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது.
சாம்சங் ஊழியர்கள் மற்றும் CITU தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து நடத்திய இந்த போராட்ட ஊர்வலம் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டதாகச் சென்னை மாநகர மூத்த காவல்துறை அதிகாரி சார்லஸ் சாம் ராஜதுரை செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இன்று கைது செய்யப்பட்ட 600 சாம்சங் தொழிலாளர்கள் நான்கு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.
இதேபோன்று செப்டம்பர் 16ஆம் தேதி காவல் துறையினர் போராட்டம் நடத்திய சுமார் 104 சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை கைது செய்து கிட்டத்தட்ட ஒரு நாள் பாதுகாப்பில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இன்று கைது செய்யப்பட்ட 600 ஊழியர்கள் குறித்து இதுவரையில் எவ்விதமான தகவல்களையும் வெளியிடாத சாம்சங் நிர்வாகம், முன்பு தொழிலாளர்களின் ஊதியம் குறித்து சில முக்கியமான விளக்கத்தைக் கொடுத்திருந்தது.
சாம்சங் நிர்வாகம்,"எங்களுடைய ஆலையில் முழுநேர உற்பத்தி தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம், இப்பகுதியில் இருக்கும் பிற தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பிரச்சினையைத் தீர்க்கவும் தயாராக இருக்கிறோம்" என சாம்சங் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
சாம்சங் தொழிலாளர்கள் சராசரியாக மாதம் ரூ.25,000 சம்பளமாக பெறுகின்றனர். இந்த போராட்டத்தின் வாயிலாக மாத சம்பளத்தை ரூ.36,000 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications