காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பன்னாட்டு நிறுவனமான சாம்சங்கின் ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு சாம்சங் நிறுவனம் அதனை சரி செய்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தங்களுடைய ஆலையில் வழக்கம் போல உற்பத்தி பணிகள் நடைபெற்று வருவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கே பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ,தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் கிட்டதட்ட 50 சதவீதம் அளவிற்கு உற்பத்தி குறைந்தது என்றும் தெரிவித்துள்ள சாம்சங் நிறுவனம் தற்போதைக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி மீண்டும் உற்பத்தியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே தங்களுடைய ஆலையில் தற்போது 100 சதவீதம் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான உற்பத்தி ஆலை இதுவாகும். இங்கே செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பொருட்களில் கிடைக்கிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியர்கள் ஆலைக்கு அருகிலேயே போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தது. இதற்கு நேரடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும்படி சாம்சங் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது.
இதனிடையே சாம்சங் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சலில் இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் 9ஆம் தேதி முதல் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இருந்தாலும் சாம்சங் நிறுவனத்தின் எச்சரிக்கையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications