உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு வரத் தொடங்கியதில் இருந்தே, மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன.
இப்போது கூட Sanofi India என்கிற மருந்து நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்து இருக்கின்றன.

Sanofi India நிறுவனம் கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 97.3 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி இருக்கிறது. அதற்கு முந்தைய டிசம்பர் 2018 காலாண்டில் 79.3 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டி இருந்தது. ஆக இந்த டிசம்பர் 2019 காலாண்டில், இந்த நிறுவனத்தின் லாபம் சுமாராக 22 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தன் நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
சரி Sanofi India நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றத்துக்கு வருவோம். Sanofi India நிறுவன பங்கு விலை, நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் 7,021 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. நேற்று தான் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகளும் வெளியாயின.
எனவே இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 7,549 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இன்றைய உச்ச விலையாக 7,640 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த 7,640 ரூபாய் தான், இந்த பங்கின் 52 வார உச்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இன்று ஒரே நாளில் சுமாராக 8.8 சதவிகிதம் பங்கு விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
அதோடு கடந்த நிதி ஆண்டுக்கு டிவிடெண்ட்டாக 106 ரூபாய் அறிவித்து இருக்கிறார்கள். அதோடு ஒரு முறை சிறப்பு டிவிடெண்ட்டாக 243 ரூபாய் அறிவித்து இருக்கிறார்கள். ஆக மொத்தம் 349 ரூபாய் டிவிடெண்ட் என்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பங்கைப் பற்றி பெரிதும் பேசப்பட்டு வருவதை பங்கு விற்பனை வால்யூம்கள் சொல்கின்றன.
மதியம் 12.14 மணி வரை, தேசிய பங்குச் சந்தையில் சுமாராக 88,000 பங்குகள் கைமாறி இருப்பதாகச் சொல்கிறார்கள். பி எஸ் இ-ல் 8,500 பங்குகள் கைமாறி இருக்கிறதாம். மும்பை பங்குச் சந்தையில் சராசரியாக கைமாறும் பங்குகள் எண்ணிக்கையை விட இது சுமாராக 5 மடங்கு அதிகம் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications