சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கோழி இறைச்சி மற்றும் முட்டை இறக்குமதியை 40 நாடுகளில் இருந்து முழுமையாக தடை செய்துள்ளது.
இதில் இந்தியாவும் இருப்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. தற்போது சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய உட்பட 40 நாடுகளில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டையை எந்த வகையிலும் இறக்குமதி அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது. மேலும், 16 நாடுகளில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் பகுதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் வெளியான மிகப்பெரிய இறக்குமதி கட்டுப்பாடுகளில் ஒன்றாகும்.

இந்த தடை உலகளவில் பறவை காய்ச்சல் (அதிக ஆபத்துள்ள பறவை காய்ச்சல்) பரவல் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தடைகள் 2004 முதல் நடைமுறையில் உள்ளன, சமீபத்திய நோய் பரவல் மற்றும் சர்வதேச அறிக்கைகளின் அடிப்படையில் படிப்படியாக தடை விதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் இந்த பட்டியலை உலக சுகாதார நிலவரங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மறு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளது.
முழு தடை விதிக்கப்பட்ட 40 நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, எகிப்து, ஈரான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்டவை அடங்கும். பகுதி தடை விதிக்கப்பட்ட 16 நாடுகளில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், போலந்து, டென்மார்க், ரொமேனியா, மலேசியா ஆகியவை உள்ளன. இந்த நாடுகளில் உள்ள சில மாகாணங்கள் அல்லது நகரங்களில் இருந்து மட்டும் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை சவுதி உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த முடிவு இந்தியா உட்பட பல நாடுகளின் ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். தமிழ்நாட்டில் உள்ள கோழி பண்ணைகள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சவுதி சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் போது இந்த தடையால் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தின் பெரும் வர்த்தகமாக இருக்கும் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் இதன் மூலம் பாதிக்கப்படலாம். எனவே, உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் இது தற்காலிக நடவடிக்கை தான், நிரந்தர தடையில்லை.
மொத்தத்தில், சவுதி அரேபியாவின் இந்த புதிய இறக்குமதி தடை சர்வதேச உணவு வர்த்தகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் பரவல் காரணமாக உலக நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டிய நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications