ஹவுதி படையினர் சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி ஏர் இந்தியா உள்பட பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் சவுதி அரேபியாவுக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தாக்குதல்கள் நடப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் சவுதிக்கான விமான சேவைகளை கடந்த வாரம் முதலே நிறுத்தி வைத்துள்ளன. நிலைமை இன்னும் சரியாகாமல் இருப்பதால் விமான சேவை ரத்தை நீட்டிப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில் மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரியாத், தம்மம் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களுக்கான அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் அக்டோபர் 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. அங்கே இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்வதற்காக, அங்கே நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
விமான சேவை ரத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு ஏர் இந்தியா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் அனைத்து பயணிகளுக்கும் அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் என ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது. மேலும் பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்புக்கும், பாதுகாப்பான பயணத்திற்குமே எப்போதும் தங்களது முன்னுரிமை என தெரிவித்துள்ளது.
இந்த காரணங்களால் ஏர் இந்தியா மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற விமான நிறுவனங்களும் தங்கள் சவுதி அரேபிய விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தம்மம், ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களுக்கான விமானங்களை அக்டோபர் 20 வரை நிறுத்திவைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் கட்டணத்தை ரீஃபண்ட் பெறலாம் அல்லது தேதியை மாற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் சவுதி அரேபியாவின் ரியாத், ஜெட்டா, தம்மம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை அக்டோபர் 24 வரை ரத்து செய்துள்ளது. ஆகாசா ஏர் ரியாத் நகரத்துக்கான விமானங்களை அக்டோபர் 24 வரையிலும், ஜெட்டா நகரத்துக்கான விமானங்களை அக்டோபர் 21 வரையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், சவுதியில் இருந்து இந்தியா வர காத்திருக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்க இருக்கும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சரிபார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

