சர்வதேச பொருளாதாரம் பணவீக்கத்திற்கு மத்தியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் திட்டத்துடன், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் காலத்தை நீட்டிப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தான் ரஷ்யா அரசு தனது உள்நாட்டு நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் தேவையைச் சமாளிக்கவும், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மார்ச் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு gasoline எனப்படும் பெட்ரோல் வகை எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சவுதி அறிவிப்பு பெரும் தாக்கத்தையும் எரிபொருள் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் டீசல் விற்பனையில் லாபம் குறைந்துள்ளதாகக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூறி வரும் வேளையில் சவுதி அரசின் அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பை 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவு வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு செய்தி நிறுவனம் (SPA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தாலும் கச்சா எண்ணெய் டிமாண்ட் குறைந்துள்ளதும், சவுதி அரேபிய அரசு தனது உற்பத்தியைக் குறைத்து விலையை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் சவுதி அரேபிய அரசு செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்ட அறிக்கையில், சந்தை நிலைத்தன்மையை ஆதரிப்பதற்காக, இந்த கூடுதல் உற்பத்தி குறைப்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. சந்தை நிலவரங்களைப் பொறுத்து படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு என்பது OPEC+ உறுப்பு நாடுகளில் சிலவற்றுடன் இணைந்து எடுக்கப்பட்டது. சவுதி, ரஷ்யா தலைமையிலான 23 உறுப்பினர் நாடுகள் கொண்டது தான் OPEC+ அமைப்பு, இதன் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட வகையில் சவுதி மற்றும் ரஷ்யா அதன் உற்பத்தியைக் குறைத்து வருகிறது.
ரஷ்யா 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேரல்களை உற்பத்தியைக் குறைக்கும் என்று கூறிய அதே நாளில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு காலத்தை நீட்டித்துள்ளது.


Click it and Unblock the Notifications