சவுதி அரேபியா அரசின் ஊடக துறையின் துணை அமைச்சரான கலீத் பின் அப்துல்காதர் அல்-காம்டி, நாட்டில் வசிக்கும் சுமார் 20.6 மில்லியன் இந்தியர்கள் சவுதி அரேபியாவின் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் முக்கிய பங்களிப்பு அளிப்பதாகப் பாராட்டியுள்ளார்.
சவுதி அரேபியா அரசின் மாபெரும் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக "உலக ஒற்றுமை" (global harmony) என்ற புதிய திட்டத்தை ரியாத் நகரில் தொடங்கியபோது அல்-காம்டி தனது அறிக்கையை வெளியிட்டார். இந்த global harmony திட்டம் சவுதி அரேபியாவின் "வாழ்க்கைத் தரம்" திட்டத்தின் கீழ் நடக்கிறது.

சவுதி அரேபியா அரசு விஷன் 2030 திட்டத்தின் வாயிலாக உலகிலேயே மிகவும் நவீன மற்றும் உயர்தர வாழ்க்கையைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இத்திட்டத்தை வகுத்து வருகிறது. இதேபோல் சவுதி அரேபியா அனைவருக்குமான நாடாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது.
உலக ஒற்றுமை நிகழ்வு ரியாத் நகரில் அக்டோபர் 13 அன்று தொடங்கியது. ரியாத்தில் இதற்காக இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், யெமன், சூடான், ஜோர்டான், லெபனான், சிரியா, வங்கதேசம் மற்றும் எகிப்து உள்ளிட்ட 11 நாடுகளின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் சுமார் 45 நாட்களுக்கு நடக்க உள்ளது.
இதில் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார பகிர்வு, பொழுதுபோக்கு மற்றும் குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பல்வேறு கைவினை கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளது.
இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே உள்ள வலுவான உறவை வலியுறுத்திய அல்-காம்டி, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் வெகுவாக பாராட்டினார்.
சவுதி அரேபியாவில் 20.6 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர், சவுதி நாட்டுக்கும் மக்களுக்கும் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது என தெரிவித்தார் கலீத் பின் அப்துல்காதர் அல்-காம்டி.
சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட பயணங்களையும் கலீத் பின் அப்துல்காதர் அல்-காம்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டார். மோடியின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவின் ஒரு வெளிப்பாடாகும் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications