உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நாடான சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா எண்ணெய் விலையை உயர்த்துவதில் மிகவும் உறுதியாக இருப்பது மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் தனக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு தானாக முன்வந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது.
இந்த உற்பத்தி குறைப்பு மூலம் கச்சா எண்ணெய் சந்தையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் செப்டம்பர், அக்டோபர் முதல் உற்பத்தி குறைப்பு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது டிசம்பர் வரையில் இந்த கட்டுப்பாடு தொடரும் என தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இதை உறுதி செய்யும் வகையில் ஒரு நாளுக்கு ரஷ்யாவின் 3 லட்சம் பேரல்கள், சவுதி அரேபியாவின் 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை டிசம்பர் மாதம் வரையில் நீட்டிக்க உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச பொருளாதாரத்தில் இது பெரும் பின்னடைவாக இருக்கும்.
இதுமட்டும் அல்லாமல் இந்த உற்பத்தி குறைப்பு குறித்த முடிவை அடுத்த மாதம் ஆலோசனை செய்து இதை தொடர்வதா, உற்பத்தியை கூடுதலாக குறைப்பதா என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சவுதி அரேபியா அறிவிப்புக்கு பின்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் மாதம் அதிகப்படியாக 2023 ஆம் ஆண்டின் உச்சபட்ச அளவான 98 டாலரை எட்டியது. ஆனால் வெனிசூலா போன்ற பிற நாடுகளின் சப்ளை அதிகரித்துள்ள காரணத்தாலும், உலகில் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை காரணமாக கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்து தற்போது 85 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்தியா வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் இதன் விலை உயர்வு இந்தியாவில் விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சியில் தொய்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இந்த விலை உயர்வால் மத்திய அரசால் பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
5 மாநில தேர்தல், 2024ல் பொது தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக குறைக்க வாய்ப்புகள் இல்லை. இப்படி வரியை குறைத்தால் மத்திய அரசின் நிதி நிலை கடுமையாக பாதிக்கும்.


Click it and Unblock the Notifications