சவுதி அரேபியா: வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக வழங்கப்படும் விசாவில் சவுதி அரேபியா அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
சவுதி அரேபியா நாட்டில் வெளிநாட்டவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலையில் இருக்கின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் அதிகம் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் வங்கதேசம் முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேச நாட்டை சேர்ந்த 2.69 மில்லியன் பேர் சவுதி அரேபியாவில் தங்கி பணிபுரிகின்றனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி சவுதி அரேபியாவில் 2.4 மில்லியன் இந்தியர்கள் தங்கி பணிபுரிகின்றனர். இவர்களில் 1.64 மில்லியன் பேர் தனியார் துறைகளில் பணி புரிகின்றனர், 7,85,000 பேர் வீட்டு வேலைகளில் பணிபுரிகின்றனர். இவ்வாறு இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய ஒரு நாடாக சவுதி அரேபியா இருக்கிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா அரசு தங்கள் நாட்டின் வேலை சம்பந்தப்பட்ட விசாவில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
சவுதி அரேபியா அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டு குடிமகன்களை அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக சவுதி அரேபிய வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்து வருகிறது. எனவே வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து பணி புரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்வதற்காக விசா விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித் தகுதி சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி சரிபார்க்கப்பட்டு அதற்கு பொருத்தமான வேலைக்கு தான் அவர் வருகிறார்களா, அதற்காக தான் விண்ணப்பம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்படும். இதனை அடுத்து தான் அவருடைய விசா விண்ணப்பம் செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் செயல்படக்கூடிய நிறுவனங்களின் உரிமையாளர்களும், மனிதவளத்துறை அதிகாரிகளும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களையும் அவர்களின் பணி அனுபவ சான்றிதழ்களையும் முன்கூட்டியே சரி பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுக்கும் தகவல் அனுப்பி இருப்பதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் ஜனவரி 14-ஆம் தேதி முதல் இந்தியர்கள் வேலைக்காக விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது அவர்களின் வேலை அனுபவம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட தகுதிகள் கட்டாயம் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே சவுதி சென்று பணிபுரியும் வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications