என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடந்தாலும் இன்னமும் பணப்பரிவர்த்தனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக சிலர் வங்கிகளுக்கு செல்கின்றனர், சிலர் ஏடிஎம் மையங்களுக்குச் செல்கின்றனர். கணக்கு வைத்திருக்கும் வங்கிகளே வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறது. அப்படி வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகளுக்கு பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கட்டணங்கள் குறித்து பெரும்பாலான மக்கள் தெரிந்து கொள்வதே இல்லை. இந்த பதிவில் எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பார்ப்போம்.
டெபிட் கார்டு வழங்குவதற்கான கட்டணம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இணையதளத்தின் படி டெபிட் கார்டுகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. சிலவற்றுக்கு கட்டணம் கிடையாது. கிளாசிக் டெபிட் கார்டு சில்வர், குளோபல் டெபிட் கார்டு, காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு போன்றவற்றைப் பெற கட்டணம் இல்லை. கோல்ட் டெபிட் கார்டு வாங்கினால் 100 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும். பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்கினால் 300 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம்: அனைத்து டெபிட் கார்டுகளுக்கும் வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் வருடாந்திர பராமரிப்புக் கட்டணமாக இதை வசூலிக்கின்றன. கணக்கை தொடங்கிய 2-வது ஆண்டு முதல் இந்த கட்டணங்கள் பொருந்தும். வெவ்வேறு வகையான கார்டுகளுக்கு ஏற்ப வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பொறுத்தவரையில் கிளாசிக், சில்வர், குளோபல் கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ரூ.200 பிளஸ் ஜிஎஸ்டி, யுவா, கோல்ட், மை கார்டு டெபிட் கார்டுகளுக்கு ரூ.250 பிளஸ் ஜிஎஸ்டி, பிளாட்டினம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.325 பிளஸ் ஜிஎஸ்டி, பிளாட்டினம் பிசினஸ் ரூபே கார்டுகளுக்கு ரூ.350 பிளஸ் ஜிஎஸ்டி, பிரைட் மற்றும் பிரீமியம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.425 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
டெபிட் கார்டு தொலைந்து விட்டால் எவ்வளவு கட்டணம்?: உங்களுடைய டெபிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ SBI வங்கியில் நீங்கள் புதிய டெபிட் கார்டைப் பெறலாம். ஆனால் அதற்கு ரூ.300 ப்ளஸ் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கார்டு படுதடைந்த நிலையில் இருந்தாலும் அவற்றை மாற்றிக் கொள்ளலாம்.
பிற கட்டணங்கள்: SBI பேங்க் தனது ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறது. பிற வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கு 100 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது மற்றும் பரிவர்த்தனை தொகையில் அதிகபட்சமாக 3.5 சதவீதம் வரை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் பிஓஎஸ் இயந்திரத்தை பயன்படுத்தி இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்கினால் மொத்த தொகையில் 3 சதவீதம் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது


Click it and Unblock the Notifications