பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் லாக்கர் சேவை மிகவும் பாதுகாப்பானது என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் உள்ளது, ஆனால் இந்த சம்பவம் வங்கி லாக்கர் உண்மையில் பாதுகாப்பானதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 55 வயதான ரஷ்மி அரோரா என்ற பெண், தன்னுடைய எஸ்பிஐ வங்கி லாக்கரை திறந்து பார்த்த போது, அதில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்களை போன்றவை மாயமாகி, முற்றிலும் காலியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் துவக்கம் 2003, அப்போது ரஷ்மி அரோரா மற்றும் அவரது கணவர் கான்பூரில் இருக்கும் ஸ்வரூப் நகரில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கை திறந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு வங்கி நிர்வாகம் 23ம் நம்பர் கொண்ட லாக்கரை கொடுத்துள்ளது.
இந்த லாக்கரில் ரஷ்மி தன்னுடைய தங்க நகை, வெள்ளி நகை, வெள்ளி பொருட்கள் என பலவற்றை வைத்து நிர்வாகம் செய்து வந்துள்ளார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் அளவிலானது.
இதற்கிடையில் ரஷ்மியின் கணவர் மறைந்துவிட, அவர் ஸ்வரூப் நகரை விடுத்து லக்னோ-விற்கு இடம்பெயர்ந்து தனது மகள் மற்றும் மருமகனுடன் தங்கி வந்தார். லாக்னோ - கான்பூர் மத்தியில் தொலைவு அதிகம் என்பதால் இவ்வங்கி லாக்கரை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு ரஷ்மி தனது லாக்கரில் இருக்கும் நகைகளை எடுக்கலாம் என தனது இளைய மகளுடன் வந்த போது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் அதிர்ச்சி ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால் ஸ்வரூப் நகரில் இருக்கும் எஸ்பிஐ வங்கி கிளையில் ரஷ்மி-யின் லாக்கர் விபரங்கள் ஏதுமில்லை. இதை தொடர்ந்து லாக்கரின் விபரங்களையும் ஆவணங்களையும் ரஷ்மி அடுத்த நாள் கொண்டு வந்து சமர்ப்பித்த போது, அவருக்காக ஒதுக்கப்பட்ட லாக்கர் நம்பர் 23 உறுதி செய்யப்பட்டது.
அடுத்த அதிர்ச்சி லாக்கருக்கான வாடகை அவ்வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து கழிக்கப்பட்ட காரணத்தால் சேமிப்பு கணக்கின் இருப்பு ஜீரோவானது. இதனால் சேமிப்பு கணக்கு, லாக்கர் சேவையும் முடங்கியது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டுக்கும் பணத்தை செலுத்தி இரண்டையும் ஆக்டிவேட் செய்து, ஒருவழியாக லாக்கரை திறப்பதற்கான வழிப்பிறந்தது.
இந்த போராட்டத்தில் வங்கி லாக்கர் சாவியை கொண்டு வருவதற்கு மறந்த ரஷ்மி ஜூலை 27ஆம் தேதி மீண்டும் வங்கிக்கு லாக்கர் சாவியுடன் வந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட லாக்கரில் எதுவுமே இல்லாமல் காலியாக இருந்ததை காண்டு அதிர்ச்சி அடைந்த ரஷ்மி அலறினார். சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயமாகியுள்ளது.
இதுக்குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது எவ்விதமான பதிலும் இல்லை, இதை தொடர்ந்து ரஷ்மி வங்கி அதிகாரிகள், வங்கி நிர்வாகம் மீது போலீல் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டு தனது லாக்கரில் இருக்கும் சொத்துக்களை திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் தற்போது வங்கி ஆவணங்கள், லாக்கர் ஆவணங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வங்கி அதிகாரிகள் யாரேனும் மோசடி செய்துள்ளார்களாக என்ற கோணத்திலும் ரஷ்மியின் புகாரை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். நீங்களும் உங்களுடைய லாக்கரை பல ஆண்டுகளாக திறக்காமல் உள்ளீர்களா..? முதலில் போய் செக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications