சென்னை: பல வங்கிகள் கேஷ் டெபாசிட் மெஷின் (CDM) மூலம் வங்கிக்கு செல்லாமலே பணம் டெபாசிட் செய்யும் சேவையை வழங்குகின்றன. சிடிஎம் என்பது வங்கியின் ஏடிஎம் (ATM) போன்ற ஒன்றாகும். இதை பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் நேரடியாக தங்களது வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால் வங்கிகளுக்குச் சென்று, நீண்ட வரிசையில் நின்று, பணம் டெபாசிட் செய்வதைத் தவிர்க்க முடியும். இந்த சேவையை எஸ்பிஐ வங்கியும் வழங்குகிறது. சிடிஎம் மெஷின் பயன்பாட்டிற்கு SBI விதிக்கும் சேவை கட்டணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் SBI சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய, இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று, வங்கிக்குச் சென்று கவுண்டரில் பணத்தை டெபாசிட் செய்யலாம், அல்லது (சிடிஎம்) மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம். எஸ்பிஐ சிடிஎம்களில் ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.200 போன்ற கரன்சி நோட்டுகள் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

கேஷ் டெபாசிட் (பேங்க் பிரான்ச்): நீங்கள் எஸ்பிஐ வங்கிக் கிளையில், ஒரு மாதத்திற்கு மூன்று முறை கேஷ் டெபாசிட் இலவசமாகச் செய்யலாம். ஆனால் ஒரு மாதத்தில் மூன்று கேஷ் டெபாசிட்களுக்கு, அப்பால் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ ரூ. 50 மற்றும் ஜிஎஸ்டியை வசூலிக்கிறது.
சேவைக் கட்டணம்: நீங்கள் அக்கவுண்ட் திறந்த, ஹோம் பிரான்ச்சில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வரம்பு இல்லை என்றாலும், மற்ற கிளைகளில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ. 2 லட்ச ரூபாய் ஆகும். ஒவ்வொரு கிளையின், கிளை மேலாளருக்கும் கேஷ் டெபாசிட் தொகையை அதிகரிக்கும் அதிகாரம் இருப்பதால், இந்த வரம்பை அதிகரிக்கலாம்.
கேஷ் டெபாசிட் (CDM): எஸ்பிஐ வங்கியின் எல்லா கிளைகளிலும் கேஷ் டெபாசிட் மெஷின்கள் இருக்காது. எனவே, பணம் டெபாசிட் செய்ய வீட்டை விட்டு வெளியேறும் முன் சிடிஎம் மெஷின்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. இதைப் பற்றித் தெரிந்துகொள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்குத் தொடர்பு கொள்ளலாம்.
சேவைக் கட்டணம்: சிடிஎம்மில் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்தால் எந்தச் செலவும் இல்லை. மேலும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஹோம் பிரான்ச்சிலோ அல்லது வேறு கிளைகளிலோ, நீங்கள் செய்யும் டெபாசிட் தொகைக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் தேர்ட் பார்ட்டிக்கு டெபாசிட் செய்தால் ரூ. 22 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் கார்டு இல்லா பரிவர்த்தனைக்கு ரூ. 22 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
அதிகபட்ச டெபாசிட் வரம்பு: கார்டு இல்லாமல் டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூபாய் ரூ. 49,000 ஆகும். டெபிட் கார்டைப் பயன்படுத்தி டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ. 2 லட்ச ரூபாய்.
உங்களுடைய முதலீடுகளுக்கும், கடனை திருப்பிச் செலுத்தவும், நீங்கள் சிடிஎம் மெஷின்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக பிபிஎஃப் கணக்குகள், ரெக்கரிங் டெபாசிட் போன்ற முதலீட்டு திட்டங்களுக்கும், நீங்கள் இந்த மெஷின் மூலம் டெபாசிட் செய்யலாம். சிடிஎம் மெஷின் மூலம் கேஷ் வித்டிராவல் வசதியும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications