இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கின்றனர். மே 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களும் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
அனைத்து இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கான கூட்டமைப்பு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தங்களுடைய கோரிக்கைகளை பலமுறை வங்கி நிர்வாகத்திடம் முன் வைத்ததாகவும் அவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்காததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. பணி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய தற்போதுள்ள கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் நீண்ட காலமாக தங்கள் தரப்பில் முன்வைக்கப்படக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக வங்கியில் தற்போது நிரந்தரமாக ஊழியர்களை வேலைக்கு எடுக்காமல் அவுட்சோர்சிங் முறையில் பல்வேறு வேலைகள் கையாளப்படுவதாகவும் இது வங்கி பணி தொடர்பான பணி பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்குவதாகவும் இந்த கூட்டமைப்பினர் கூறுகின்றனர். மேலும் குறிப்பிட்ட சில நுழைவு நிலை பணிகளுக்கு நீண்ட காலமாக புதிதாக ஆட்களை தேர்வு செய்யாமலேயே இருப்பதாக கூறுகின்றனர். வரும் காலத்தில் இந்த பணிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு வங்கி நிர்வாகம் திட்டமிடுகிறதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
வங்கி கிளைகள் பாதுகாப்பான முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்த Messenger, armed guard-களை பணி நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் போதிய அளவில் புதிதாக ஆட்களை பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முடிவினை ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
நேரடியாக வங்கிகளுக்கு சென்று எந்த சேவைகளையும் பெற முடியாமல் போகலாம். அதே வேளையில் டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடர்ச்சியாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மே 25, 26 ஆகிய இரண்டு நாட்களிலும் தங்களுடைய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருப்பது நல்லது. இது திங்கள், செவ்வாய் கிழமைகளாக உள்ளது, அதற்கு முன்பு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு முன்னதாக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்திருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

