இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்திற்கு ஆபத்தா என அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Siriusim என்ற பெயரை கொண்ட ஹேக்கர் அல்லது மோசடி கும்பல் ஒன்று, எஸ்பிஐ வங்கியுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை கசியவிட்டுள்ளதாக 'CyberPulse' என்ற சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு கணக்கு மூலம் தகவல் வெளியானது. டார்க் வெப்பில் எஸ்பிஐ வாடிக்கையாளர் விவரங்கள், கடன் விண்ணப்பங்கள், கணக்கு தொடங்கும் படிவங்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்டவை கசியவிடப்பட்டுள்ளன.

டார்க் வெப்பில் காணப்பட்ட சுமார் 3,75,000 பதிவுகளை ஆரம்பகட்டமாக பகுப்பாய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்படி கசிந்ததாக கூறப்படும் தகவல்களில் வாடிக்கையாளர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் குடியிருப்பு முகவரிகள் ஆகியவை அடங்கும். மேலும், கிளை மற்றும் வாடிக்கையாளர் தகவல் கோப்பு அடையாள எண்கள் மற்றும் கடன் பதிவுகள் தொடர்பான மெட்டாடேட்டா போன்றவையும் இதில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தரவு கசிவில் பெயர் இடம்பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களையும் எஸ்பிஐ வங்கி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனித்தனியாக தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம், உங்களின் கணக்கு, பேலன்ஸ், பணம் என அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என கூறியுள்ளது. இதனை எக்ஸ் பக்கத்திலும் பதிவாக வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மிக குறைவான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் நலன்களை பாதுகாக்க வங்கி உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியின் முக்கிய வணிக செயல்பாடுகள், நிதி நிலைத்தன்மை அல்லது தொடர் வணிக நடவடிக்கைகளில் எந்தவிதமான பெரிய தாக்கமும் ஏற்படவில்லை என்றும், வழக்கம்போல பணிகள் நடைபெறுவதாகவும் வங்கி விளக்கம் தந்துள்ளது.
மேலும் கசிந்த தரவுகளின் உண்மைத்தன்மை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுவதற்கு CERT-In அங்கீகரிக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நியமித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறையான தடுப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என எஸ்பிஐ கூறியுள்ளது.
வங்கி தரப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் பீதி அடைய தேவையில்லை என கூறப்பட்டாலும், நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உங்களின் ஓடிபி, ATM PIN, இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் அல்லது பிற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கியிலிருந்து பேசுவதாக கூறி உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை சொன்னாலும் அது உண்மையானது என்று நம்பிவிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேஒய்சி அப்டேட், கணக்கு முடக்கம், கடன் ஒப்புதல் என கூறி போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், செயலிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், யாரோ அனுப்பும் தெரியாத Linkகளை கிளிக் செய்ய கூடாது.
மேலும் உங்கள் கணக்கு அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகளை அடிக்கடி சரிபார்க்கவும். சந்தேகம் படும் படி மற்றும் நீங்கள் மேற்கொள்ளாத பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் உடனே வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

