இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட் எனப்படும் MCLR விகிதத்தை திடீரென உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும், இதனால் மக்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் ஈஎம்ஐ தொகையில் மாற்றம் ஏற்படும்.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வட்டியை உயர்த்தும் காரணத்தால் பிற அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் வட்டியை அடுத்தடுத்து உயர்த்தும், இதனால் அனைத்து தரப்பு மக்களும் அதிகப்படியான ஈஎம்ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு வருடத்திற்கான MCLR விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு வருகிற வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரத்தில் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இரண்டாவது வட்டி உயர்வு ஆகும். வங்கிகளின் வர்த்தகத்திற்குத் தேவைப்படும் நிதியை வெளியில் இருந்து அதிகமான வட்டியில் திரட்டும் காரணத்தால், இவ்வங்கியின் லாபம் குறைந்து வருகிறது. இதை ஈடு செய்யும் வகையில் தான் தற்போது கடனான வட்டி விகிதத்தையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவரான சி.எஸ்.செட்டி இதுகுறித்து கூறுகையில் வங்கியின் மொத்த கடன் புத்தகத்தில் 42 சதவீத கடன்களை MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடன்களுக்கான வட்டி விகிதத்தை external benchmark உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வங்கிகளுக்கு அதிகப்படியான நிதி தேவை இருக்கும் காரணத்தால் வைப்புத் நிதிக்கு ஏற்கனவே அதிகப்படியான வட்டி விகிதங்களில் வட்டி வருமானம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிதி ஆதாரத்திற்காக இனியும் வைப்பு நிதியை ஈர்ப்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்தாது. இதேவேளையில் நிதியைத் திரட்ட மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது எஸ்பிஐ வங்கி.
எஸ்பிஐ மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலத்திற்கான MCLR-ஐயும் உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், ஒரு இரவு, ஒரு மாதம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட காலத்திற்கான MCLR விகிதங்களை மாற்றவில்லை.


Click it and Unblock the Notifications