நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இன்று "SBI அஸ்மிதா" என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண் தொழில் முனைவருக்காகவே பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தவித பிணையமும் இல்லாமல் குறைந்த வட்டியில் இதன் மூலம் கடன் பெற முடியும். 2025-ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட எஸ்பிஐ அஸ்மிதா திட்டம், பெண் தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை எளிதாக விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
"அஸ்மிதா" திட்டத்தின் மூலம் கடன்களை வழங்குவதற்காகவே SBI பேங்க் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. API தொழில்நுட்பத்தின் உதவியால் கடன் வழங்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. கடன் பெற நினைப்பவர்களின் GSTIN, வாடிக்கையாளரின் வங்கி அறிக்கைகள் போன்ற தகவல்கள் அனைத்தும் தானாகவே பெறப்பட்டு சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கின்றன. இதனால் ஆவணங்களை நேரில் சென்று சரி பார்க்கும் சிரமமே இருக்காது. வணிகத்தின் தேவையை மதிப்பீடு செய்து கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.

SBI அஸ்மிதா கடன் பெறுபவர்களில் சிறந்த பெண் தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் வங்கி கவனம் செலுத்த விரும்பும் முக்கிய துறைகளில் MSME கடன் துறையும் ஒன்று. SBI அஸ்மிதா திட்டம் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாமானியர்களையும் வருங்காலத்தில் பெரிய தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது
SBI வழங்கும் இந்த திட்டமும் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் முத்ரா கடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வழங்கும் அஷ்மிதா திட்டமும் இணைந்துள்ளது. தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.
SBI, பெண்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக "Nari Shakti" என்ற பிளாட்டினம் டெபிட் கார்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டு RuPay மூலம் இயங்குகிறது. இது 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முதல் டெபிட் கார்டு ஆகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications