இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அடுத்த 3-5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிகர லாபத்தைத் தாண்ட இலக்கு வைத்துள்ளது என்று இவ்வங்கியின் புதிய தலைவரான சி.எஸ். ஷெட்டி கூறியுள்ளார். எஸ்பிஐ, 2023-24 நிதியாண்டில் ரூ.61,077 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்த நிலையில், 1 லட்சம் கோடி, அதுவும் அடுத்த 5 வருடத்தில் என்பது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
2023-24 நிதியாண்டில் பதிவான ரூ.61,077 கோடி நிகர லாபம் என்பது முந்தைய ஆண்டை காட்டிலும் 21.59% வளர்ச்சியாகும், இதேவேகத்தில் வளர்ச்சி அடைந்தால் கட்டாயம் 1 லட்சம் கோடி லாபத்தை அடைய முடியும் என்பது எஸ்பிஐ திட்டம்.

அடுத்த 3-5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுவது சாத்தியமா என்று இந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் கேட்டபோது வங்கியின் புதிய தலைவரான சி.எஸ். ஷெட்டி கூறுகையில் " ரூ.1 லட்சம் கோடி லாபத்தை அடைவதற்கான திறன் எங்களிடம் உள்ளது. நிச்சயமாக, இந்தியாவில் முதல் நிதியியல் நிறுவனமாக இந்த மைல்கல்லை அடைவோம்" என்று மிகுந்த நம்பிக்கை உடன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "லாபம், சந்தை மூலதனம் போன்றவை எங்களுக்கு மிகவும் முக்கியமான கூறுகளாக இருந்தாலும், நாங்கள் வாடிக்கையாளர் மையமாக கொண்ட சேவைகளைச் சமமாக மதிக்கிறோம், இது எங்கள் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாக செயல்படுகிறது." என தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் கோடி நிகர லாபம் அடைவதில் கார்ப்பரேட் கடன் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில் இதுகுறித்து ஷெட்டி பேசுகையில், வங்கி ஏற்கனவே இந்தியாவில் இருந்து ரூ.4 லட்சம் கோடி வலுவான கடன் கோரிக்கைகளைப் பெற்றுள்ளது, தனியார் துறையின் மூலதன செலவு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
இதேவேளையில் எஸ்பிஐ வங்கியின் கடன் வர்த்தகம் அதிகரிக்க உதவியாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மூலதன செலவு இலக்கை 11.1% அதிகரித்து 2023-24க்கான ரூ.11.11 லட்சம் கோடிக்கு உயர்த்துவதாக அறிவித்தார், இது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.


Click it and Unblock the Notifications